டெக்ஸாஸ்
ஆயிரக்கணக்கான மீன்கள் டெக்ஸாஸ் கடற்கரையில் செத்து மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள வளைகுடா கடற்கரையில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. எல்லா மீன்களும் செத்துக் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி கடல்சார் நிபுணர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் வெதுவெதுப்பான நீரே இவ்வளவு மீன்களின் இறப்புக்குக் காரணம் என்பது தெரிய வந்தது.
பொதுவாகக் குளிர்ந்த நீரில் அதிக அதிக ஆக்ஸிஜன் இருக்கும்; அதே வேளையில் வெதுவெதுப்பான நீரில் ஆக்ஸிஜன் அவ்வளவாக இருக்காது. குறிப்பாகத் தண்ணீரின் வெப்ப அளவு 70 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் செல்லும் போது அதில் ஆக்ஸிஜன் குறைகிறது.
அதைக் காட்டிலும் முக்கியமாக ஆழமான தண்ணீரை விட ஆழமற்ற பகுதியில் உள்ள தண்ணீர் அதிவேகத்தில் வெப்பமடையும். எனவே அந்த பகுதியில் தண்ணீர் செல்லும் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மீன்கள் பாதிப்படைந்து, ஒழுங்கற்ற முறையில் அதிவேகமாக, இயல்புக்கு மாறாகச் செயல்படும்.
இதன் காரணமாக ஆக்ஸிஜன் அளவு மேலும் குறைந்து மீன்கள் இறந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.