சென்னை
சென்னையில் இருந்து 3 ஆண்டுகளுக்குப் பின் முதல் ஹஜ் விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது.
புனித ஹஜ் பயணம் இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான கருதப்படுகிறது. இதை நிறைவேற்ற முஸ்லிம்கள் சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்குச் செல்வார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாகப் புனித பயணம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
சென்ற ஆண்டு தமிழக ஹஜ் பயணிகள் சென்னையில் இருந்து செல்ல முடியாததால் கொச்சியில் இருந்து சென்றனர். நேற்று 3 ஆண்டுகளுக்குப் பின் புனித ஹஜ் பயணத்திற்காக முதல் ஹஜ் விமானம் சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியா ஜித்தா நகருக்கு 128 பெண்கள் உள்பட 254 பேருடன் புறப்பட்டு சென்றது.
நேற்றைய 2-வது விமானத்தில் 150 பேர் புறப்பட்டனர். ஹஜ் புனித பயணம் செல்பவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார், ஹஜ் கமிட்டி செயலாளர் முகமது நசிமுத்தீன், விமான நிலைய இயக்குநர் தீபக் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.