இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகப் போவதாக நீண்ட நாட்களாக கூறப்பட்டு வருகிறது. இப்போது அந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உலக கிரிக்கெட் அணிகளின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படுபவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. தற்போது அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்குவது குறித்த விவாதம் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.
இது குறித்து, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், சவுரவ் கங்குலியின் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கலாம் என்று முன்னதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகும் செய்திகளின்படி, ரன்பீர் கபூர் இந்த வேடத்தில் நடிக்கவில்லை என கூறப்படுகிறது.
தயாரிப்பாளர்கள் ரன்பீர் கபூருக்குப் பதிலாக நடிகர் ஆயுஷ்மான் குரானாவை இந்த பாத்திரத்திற்காக கிட்டத்தட்ட இறுதி செய்திருக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கயிருப்பதாக கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு குறித்து ஆயுஷ்மான் குரானாவிடம் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் இந்தப் படத்தின் ஒப்பந்தம் இன்னும் சில நாட்களில் கையெழுத்தாக உள்ளது.
2019 ம் ஆண்டு வெளிவந்த அந்தாதூன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற ஆயுஷ்மான் குரானா இந்த படத்தில் சவுரவ் கங்குலியாக நடிக்க சரியான தேர்வு என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
சவுரவ் கங்குலியை சந்தித்து பேசவுள்ள தயாரிப்பாளர்கள், அதன் பிறகுதான் அனைத்து விஷயங்களைப் பற்றியும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.
சவுரவ் கங்குலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.