ஹரித்வார்
ஹரித்வார் மாவட்ட எஸ் பி ,மல்யுத்த வீராங்கனைகள் பதக்கங்களைக் கங்கையில் வீசுவதாக உள்ளது குறித்துப் பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இன்று மல்யுத்த வீராங்கனைகள் சமூக ஊடகங்களில் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நீங்கள் அனைவரும் கடந்த 28-ஆம் தேதி எங்களுக்கு என்ன நடந்ததென்று பார்த்தீர்கள். ஜந்தர் மந்தரில் நாங்கள் அறவழியில்தான் போராடியும் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். வீராங்கனைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைக்கு நீதி கோரியதால் நாங்கள் தவறிழைத்துவிட்டோமா?ஆனால் அரசு அதிகாரிகள் எங்களைக் கிரிமினல் குற்றவாளிகள் போல் நடத்தியுள்ளனர்.
நாங்கள் எங்களின் பதக்கங்களை யாரிடம் கொடுக்கலாம் என்று யோசித்தோம். குறிப்பாகக் குடியரசுத் தலைவரிடம் கொடுக்கலாமா என யோசித்தோம். நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து அவர் 2 கி.மீ தூரத்தில்தான் இருந்தும் அவர் எங்கள் வேதனையைக் கண்டு கொள்ளவே இல்லை. எங்களை (பெண் பிள்ளைகளை) மகள்கள் என்றழைக்கும் பிரதமரிடம் ஒப்படைக்கலாமா என யோசித்தோம்.
அவரும் நாங்கள் போராட்டத்தை ஆரம்பித்ததிலிருந்து ஒருமுறைகூட எங்களைப் பற்றி விசாரித்ததில்லை. எல்லாவற்றையும் விட நாங்கள் யாருக்கு எதிராக இந்தப் போராட்டத்தை நடத்துகிறோமோ அவருக்கே புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது ஆகவே, நாங்கள் காவல் துறையைக் கண்டித்தும், நீதி கிடைக்காததற்குக் கண்டனம் தெரிவித்தும் இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் கங்கை நதியில் பதக்கங்களை வீசிவிட்டுச் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருக்கிறோம்”
என்று குறிப்பிட்டிருந்தனர்.
இது குறித்து ஹரித்வார மாவட்ட எஸ் பி அஜய் சிங், செய்தியாளர்களிடம்,
“மல்யுத்த வீரர்கள் அவர்கள் விரும்பியதைச் செய்யலாம். அவர்கள் புனித கங்கை நதியில் தங்கள் பதக்கங்களை மூழ்கடிக்க விரும்பினால், அவர்களை நான் தடுக்கப் போவதில்லை. ஏனெனில், இதுவரை எனது உயரதிகாரிகளிடமிருந்து எனக்கு அப்படி எந்த ஒரு உத்தரவும் வரவில்லை. மக்கள் தங்கம், வெள்ளி, அஸ்தி என எதை வேண்டுமானாலும் கங்கையில் போடுவதுண்டு. கங்கா தசரா தினத்தில் 15 லட்சம் மக்கள் கங்கையில் புனித நீராடுவார்கள். அதனால் நாங்கள் மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகளையும் அழைக்கிறோம்” .
என்று கூறியுள்ளார்.
எஸ் பியின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சினால் அந்தப் பகுதியில் கடும் சர்ச்சையும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.