மதுரை:
ன்னை முதல்வராக்கினால் 150 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வதற்கான ரகசியத்தை சொல்வேன் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்றது.

அப்போது கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் கலந்துகொண்டு பேசியதாவது:

“சமத்துவ மக்கள் கட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்குமா என 2026 ல் தெரிய வரும், போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். நான் வானத்தில் இருந்து குதித்து வரவில்லை. சைக்கிளில் சென்று தெரு தெருவாக பேப்பர் போட்டேன். போதை பொருளால் இளைஞர்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் இளைஞர்களின் அறிவை முடக்கி வைப்பதில் வெளிநாட்டு சதி உள்ளது.

போதை பொருள்கள் பல்வேறு ரூபங்களில் இந்தியாவில் ஊடுருவி வருகின்றது. மதுபான கடைகளுக்கு சென்று மதுபானங்கள் வாங்காமல் இருந்தாலும் கூட மதுவிலக்கை கொண்டு வரலாம். போதையை ஒழிக்க நாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும். 40,000 கோடி வருவாய்க்காக மதுவை அரசு விற்க கூடாது. மதுபான வருவாய்க்கு மாற்றாக பிற வருவாய் என்ன கிடைக்கும் என தமிழக அரசு சிந்தித்து பார்க்க வேண்டும்.

அறிவு, ஆற்றல் இருந்தும் தமிழக இளைஞர்கள் மதுவுக்கு அடிமைப்பட்டு கிடக்குகிறார்கள். பூரண மதுவிலக்கிற்க்காக சமத்துவ மக்கள் கட்சி இறுதி வரை போராடும். சமத்துவ மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் பணி பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும். தமிழகத்தில் பணம் இல்லா அரசியல் நடைபெறவில்லை. தமிழகத்தில் எதிர்வரும் தேர்தல்கள் இராணுவ பாதுகாப்பில் நடைபெற வேண்டும். போதை இல்லா மாநிலங்களில் கொலை, கொள்ளை, கலவரம், சாலை விபத்துகள் குறைந்து உள்ளன. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரும் பட்சத்தில் கொலை, கொள்ளை, கலவரம், சாலை விபத்துகள் குறையும்.

தற்போது எனக்கு 69 வயதாகிறது; ஆனால், 25 வயது இளைஞனைப் போல இருக்கிறேன்; 150 ஆண்டுகள் வரை, நான் உயிருடன் இருப்பேன். அதற்கான வித்தையை கற்று வைத்துள்ளேன். 2026ம் ஆண்டு என்னை முதலமைச்சர் ஆக்கினால், அந்த வித்தை என்னவென்று உங்களுக்கு சொல்கிறேன்.

தமிழகத்தை ஆளக் கூடிய நல்லவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும். 6 மாதத்தில் ஒரு நபரை பற்றி பொது வெளியில் பேச உள்ளேன். அதிமுக, திமுக ஆட்சிக்கு வருவதற்கு சமத்துவ மக்கள் கட்சி உழைத்து உள்ளது. தமிழகத்தில் தாமரை சின்னத்தை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கூறியது நான் தான். திமுகவிற்கு உழைத்ததற்கு ராஜ்ய சபா உறுப்பினராக கருணாநிதி எனக்கு பதவி கொடுத்தார், அதிமுக உழைப்பை மட்டும் எடுத்துக் கொண்டு கருவேப்பிலையாக தூக்கி எரிந்தது என சரத்குமார் விமர்சித்தார்.