புதுடெல்லி: 
புதிய ரூபத்தில் பிரபல மொபைல் கேம் ‘பப்ஜி’ இந்தியாவில் மீண்டும் வரவிருக்கிறது.

தென்கொரிய நாட்டின் பப்ஜி மொபைல் விளையாட்டு செயலி உலக அளவில் பிரபலமானது. இச்செயலியை இந்தியாவில் வெளியிடும் மற்றும் நிர்வகிக்கும் உரிமையை சீன நிறுவனமான டென்சென்ட் நிறுவனத்திற்கு பப்ஜி நிறுவனம் வழங்கியிருந்தது.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையின் நலன் கருதி இந்திய அரசு பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு கடந்த 2022ம் ஆண்டு தடை விதித்தது. குறிப்பாக பப்ஜி விளையாட்டில் ஈடுபட்ட பலர் மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்ததால் இந்த விளையாட்டு கடந்த ஆண்டு இந்திய அரசால் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள சட்டங்களுக்கு ஏற்றவாறு பப்ஜி விளையாட்டை மாற்றி அமைத்து மீண்டும் இந்தியாவில் பப்ஜி விளையாட்டு வருகிறது. இது குறித்து மத்திய தொழில்முனைவோர், திறன் மேம்பாடு, மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், தற்போது மூன்று மாத சோதனை அடிப்படையில் இந்த விளையாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.