செங்கல்பட்டு

செங்கல்பட்டு நகரில் ஒருவர் பாம்பை தோளில் போட்டுக் கொண்டு டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையை அடுத்த செங்கல்பட்டு நகரில் பழைய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது.  நேற்று மாலை அந்த கடைக்கு ஒருவர் தோளில் துண்டு போட்டுக்கொண்டு வருவதுபோல சுமார் 7 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு ஒன்றைத் தோளில் போட்டுக்கொண்டு நண்பர் ஒருவருடன் மது வாங்க இருசக்கர வாகனத்தில் வந்தார்.

அங்கு மது வாங்க வந்த சக மதுபிரியர்கள் அலறியடித்தபடி அவருக்கு வழிவிட்டு ஓடினர்.  பிறகு, அவரது செய்கை அந்த பாம்பைக் கையில் வைத்துக்கொண்டு வேடிக்கை காட்டியபடி இருந்ததால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் இதனை அதிசயமாகப் பார்த்தனர்.

அவர் அந்த பாம்பை அவர் அணிந்திருந்த லுங்கியில் போட்டு மடித்துக் கட்டிக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஏறிச் சென்றார்.  அவரை பின் தொடர்ந்து சென்றபோது அந்த பாம்பை புலிப்பாக்கம் அருகே கொள்வாய் ஏரி அருகேயுள்ள முட்புதரில் விட்டு விட்டார்.

அவரிடம்  இது குறித்து கேட்டபோது, அவர் ”நான் செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூரை சேர்ந்த சங்கர்.  நான் வரும் வழியில் பாம்பு குறுக்கே ஓடியதால் அவை வாகனங்களில் சிக்கி உயிரிழக்கக்கூடாது என்ற எண்ணத்தில் பிடித்துக்கொண்டு வந்து பாம்பின் உயிரைக் காப்பாற்றினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.