விழுப்புரம்

மிழக அரசு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவது குரித்து அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ம் தேதி அமரன் என்பவரிடம் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் வாங்கி அருந்தியுள்ளனர். அனைவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, ஜிப்மர், புதுச்சேரி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 13 பேர் உயிரிழந்தனர். சுமார் 40-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைப்போல, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பெருங்கரணை, பேரம்பாக்கத்தில் கள்ளச்சாராயம் வாங்கி அருந்தியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கி உள்ளது/  இதற்கான காசோலையை அளித்த அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம்:

“இந்த 10 லட்சம் நிவாரண உதவி வழங்கியதற்கு எதிர்க்கட்சிகாரர்கள் ‘குடித்துவிட்டு இறந்தவர்களுக்கு எல்லாம் ஏன் 10 லட்சம் ரூபாய் கொடுக்கிறீர்கள்?’ என்று கேட்கின்றனர்.  ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை என்பது கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களுக்காகக் கொடுக்கப்படுவது அல்ல. சாராயம் குடித்து இறந்தவரின் குடும்பம் ஏழைக் குடும்பமாக இருக்கிறது. மீனவர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களாக இருக்கின்றன. எனவேதான், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

நிவாரணம் தொகை வழங்குவதை அரசியலாக்க வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கும் கிடையாது; எங்களுக்கும் கிடையாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, இதுபோன்ற கள்ளச் சாராயங்கள் விற்பனை செய்யப்படக் கூடாது என்பதுதான் தமிழக முதல்வரின் நோக்கம். அதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக அவர் எடுத்து வருகிறார்”

என்று கூறினார்.