ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இரு வாரம் ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.

தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், அல்-காதிர் அறக்கட்டளை நில விவகாரத்தில் அரசுக்கு ரூ.5500 கோடி இழப்பு ஏற்படுத்தி ஊழல் செய்ததாகத் தேசிய பொறுப்பு கூறல் அமைப்பு (என்ஏபி) அவரை கடந்த 9ம் தேதி கைது செய்தது. வழக்கு ஒன்றின் விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இம்ரானை நீதிமன்ற வளாகத்தில் அராஜகமாக நுழைந்து துணை ராணுவ ரேஞ்சர்கள் கைது செய்தது சட்டவிரோதம், செல்லாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று முன் தினம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இம்ரான் கைதை கண்டித்து அவரது கட்சியினர் நாடு முழுவதும் நடத்திய வன்முறையில் 8 பேர் பலியாகி உள்ளனர்.சுமார் 500க்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர். இத்தகைய பரபரப்பான சூழலில், அல்-காதல் அறக்கட்டளை ஊழல் வழக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹசன் அவுரங்கசீப், சமன் ரபத் ஆகியோர் முன் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இம்ரான் கான் நேரில் முன்னிறுத்தப்பட்டார்.

அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் நீதிமன்றத்தின் முன்பாக குவிந்து காவல்துறைக்கு எதிராக கோஷமிட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இம்ரானுக்கு 2 வாரக் காலம் பாதுகாப்பு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். விசாரணைக்கு முன்பாக, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த இம்ரான், தான் மீண்டும் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டால், நாடு முழுவதும் அமைதியின்மை ஏற்படும் என எச்சரித்த நிலையில் அவருக்கு இடைக்கால நிவாரணமாக 2 வாரக் கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.  அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றார்.