பெங்களூரு
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசவராஜ்பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில். 24ஆம் தேதியுடன் இந்த ஆட்சியின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதையொட்டி இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய ஆட்சி பதவி ஏற்கும் வகையில், 224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி (அதாவது இன்று) ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த மார்ச் 29-ந்தேதி அறிவித்தது.
அதன்படி இன்று காலை 7 மணிக்கு மொத்தமுள்ள 224 தொகுதிகளிலும் 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. இத்தேர்தலில் வாக்களிக்க 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 பேர் தகுதி உள்ளவர்களாக உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 64 லட்சத்து 74 பேரும், பிற வாக்காளர்கள் 3-ம் பாலினத்தவர்கள் 4 ஆயிரத்து 927 பேரும் உள்ளனர்.
இவர்களில் 11 லட்சத்து 71 ஆயிரத்து 558 பேர் இளம் வாக்காளர்கள், 5 லட்சத்து 71 ஆயிரத்து 281 பேர் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் ஆவார்கள். மேலும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் 12 லட்சத்து 15 ஆயிரத்து 920 பேர் உள்ளனர்.
நேற்று காலையில் அவர்களுக்கு மின்னணு வாக்கு எந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பதிவுக்குத் தேவையான தளவாடப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 75 ஆயிரத்து 603 மின்னணு வாக்கு எந்திரங்களும், 70 ஆயிரத்து 300 கட்டுப்பாட்டு எந்திரங்களும் தேர்தல் பணிக்குப் பயன்படுத்தப்படுகின்றன. தவிர யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் 76 ஆயிரத்து 202 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது..