ழநி

க்தர்கள் அன்னதானம் சாப்பிட்ட இலைகளைக் கொண்டு உரம் தயாரிக்கப் பழநி மலைக்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் திருவிழாக் காலங்களில் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர்.  மேலும் தற்போது கோடை விடுமுறைக் காலம் என்பதால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.  கடந்த 2002 ஆம் ஆண்டு இங்கு வரும் பக்தர்களுக்காகத் தமிழக முதல்வரின் அன்னதான திட்டத்தில் தினமும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  அது கடந்த 2012-ம் ஆண்டு நாள் முழுவதும் அன்னதான திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது.

தினமும் காலை 8 முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், பாயசம், அப்பளம் மற்றும் ஊறுகாயுடன் இந்த திட்டம் மூலம் அன்னதானம் வழங்கப்படுகிறது. இங்குப் பந்திக்கு 450 முதல் 500 பேர் வீதம் தினமும் 4,500 முதல் 5,000 பேர் வரை அன்னதானம் சாப்பிடுகின்றனர். பக்தர்களின் வருகை அதிகரிப்பால் அன்னதானம் சாப்பிடுவோரின் எண்ணிக்கையும் தற்போது 7,000-ஆக அதிகரித்துள்ளது.  அன்னதான திட்டத்தில் பக்தர்கள் சாப்பிட்ட இலைகள் குப்பையில் கொட்டப்படுகின்றன.

அதில் இருந்து உரம் தயாரிக்கக் கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, ரூ.14 லட்சம் மதிப்பில் நவீன இயந்திரம் மற்றும் ராட்சத குழாய்கள் சென்னையில் இருந்து வாங்கப்பட்டு, பழநிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.  அவ்வியந்திரத்தில் பக்தர்கள் சாப்பிட்ட இலைகள், காய்கறி கழிவுகளைப் போட்டு அரைத்து கூழாக்கி, குழாய் மூலம் மலையடிவாரத்தில் அமைக்கப்பட உள்ள உரத் தொட்டியில் சேமித்து உரமாக மாற்றுவதற்குத் தேவையான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.