ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பில்லை என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜி ஸ்கொயர் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து அந்நிறுவனத்துடன் தொடர்புடைய 40 இடங்களில் நான்கு நாட்களுக்கும் மேலாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிகர மதிப்பு 38000 கோடி ரூபாய் என்றும் அந்நிறுவனம் அரசியல் கட்சியினரின் பின்புலத்தத்தில் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் பரவி வந்தது.
மேலும் வருமான வரி சோதனையில் 3.5 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், அனைத்து தகவல்களையும் மறுத்துள்ள அந்நிறுவனம் தங்கள் நிறுவனத்துக்கு எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
தவிர, இது வருமான வரித்துறையினரின் வழக்கமான சோதனை தான் என்றும் தங்கள் நிறுவனத்தின் நிகர மதிப்பு மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவல் ஆகியவை தங்கள் நிறுவனத்தின் நன்மதிப்பை கெடுக்கும் நோக்கில் வெளியான ஆதாரமற்ற தகவல் என்றும் விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக விரிவான விளக்கம் வேண்டும் என்று நினைப்பவர்கள் வருமான வரித்துறையினரிடமே ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்த விவரங்களைக் கேட்டுப் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.