குரங்கில் இருந்து வந்தவர்கள் அல்ல – இந்தியர்கள் அனைவரும் முனி குமாரர்கள் என்று 2018 ம் ஆண்டு மத்திய கல்வித்துறை இணை அமைச்சராக இருந்த சத்யபால் சிங் பேசியிருந்தார். அதோடு டார்வினின் பரிணாம வளர்ச்சி குறித்த தகவல் அறிவியல் ரீதியாக தவறு என்றும் கூறி அதிரவைத்தார்.
அப்போது இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது, ஆனால் 2019 தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெற்றதை தொடர்ந்து டார்வின் குறித்த பாடம் தேர்வில் இருந்து முதலில் நீக்கப்பட்டது.
பின்னர், மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்த டார்வின் பாடப்பகுதி அந்த புத்தகத்தில் இருந்தே நீக்கப்பட்டது.
இந்தியர்கள் யாவரும் ரிஷி-கள் வழித்தோன்றல்கள் என்று கூறிய சத்யபால் சிங் பேச்சை உறுதிப் படுத்தும் விதமாக வேறு சில பாடப்பிரிவுகள் மெல்ல மெல்ல சேர்க்கப்பட்டு வருகிறது.
தசாவதாரத்திலேயே மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து டாரவினை விட சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளதால் பரிணாம வளர்ச்சி குறித்த பாடம் இந்தியர்களின் ரத்தத்தில் ஊறிப்போயுள்ளதாக ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகள் கூறுகின்றனர்.
சிபிஎஸ்இ கல்வியில் பத்தாம் வகுப்பு தேறிய உயரடுக்கு மாணவர்கள் மட்டுமே 11 ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் டார்வினின் பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வை படிக்க முடியும்.
டார்வின் குறித்த அறிவியல் பாடம் மட்டுமன்றி முகலாய மன்னர்கள் குறித்த வரலாற்று பகுதிகளும் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 24000 பள்ளிகளில் என்சிஆர்டி பாடப்புத்தகம் பின்பற்றப்படுகிறது இதனை லட்சக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.
கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு பள்ளி திரும்பியுள்ள மாணவர்களுக்கு படிப்பு சுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக “அறிபூர்வமான பணிச் சுமையைக் குறைக்கக்கூடிய” வகையில் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக என்சிஆர்டி தெரிவித்துள்ளது.
அதேவேளையில் மகாத்மா காந்தியைக் கொன்ற இந்து தீவிரவாதி நாதுராம் கோட்ஸே குறித்த பாடங்களையும் நீக்கியுள்ளது ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை புகுத்துவதாகவே உள்ளது என்று கூறப்படுகிறது.
மோடியின் பிஜேபி மற்றும் அதன் சித்தாந்த வழிகாட்டியான, ஆர்எஸ்எஸ், நீண்ட காலமாக இந்தியாவின் பாடப்புத்தகங்கள் திருத்தப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றன, அவை அரசியலமைப்பு ரீதியாக மதச்சார்பற்ற இந்தியாவை ஒரு இந்துத்துவா அரசாக மாற்றும் அரசியல் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பாடத்திட்டத்தில் இந்த மாற்றத்தின் மூலம் வரும் ஆண்டுகளில் சிபிஎஸ்இ-யில் 10 ம் வகுப்பு தேறி உயர்கல்வி பயிலும் உயரடுக்கு மாணவர்கள் மட்டுமே அனைத்து போட்டித் தேர்வுகளிலும் வெற்றிபெற முடியும் என்று நிலையும் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்திய மக்கள் தொகையில் 14 சதவீத இஸ்லாமியர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது குறித்த வரலாற்றை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கியுள்ள ஆர்எஸ்எஸ் – பாஜக அரசு அகண்ட பாரதம் குறித்து பேச தகுதியற்றது என்றும் குற்றம்சாட்டப்பபடுகிறது.
இதுகுறித்து அல்ஜசீரா மேற்கொண்ட ஆய்வில் இந்திய மாணவர்களிடையே பாடப்புத்தகங்கள் வழியாக ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை விதைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளது.