மே 10 ம் தேதி நடைபெற இருக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகும் 212 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
189 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை 11 ம் தேதி வெளியிட்ட பாஜக 23 பேர் கொண்ட இரண்டாவது பட்டியலை நேற்று வெளியிட்டது.
தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் 16 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை இதில் சமீபத்தில் மைசூர் சாண்டல் சோப் நிறுவன ஊழல் விவகாரத்தில் சிக்கிய விருபாக்சப்பா-வுக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை.
அதேபோல் முடிகெரே தொகுதி எம்.எல்.ஏ. குமாரசாமி-க்கு டிக்கெட் வழங்கப்படாததைக் கண்டித்து அவர் பாஜக கட்சியில் இருந்து வெளியேறப்போவதாக அறிவித்துள்ளார்.
தவிர, பாஜக பட்டியலின தலைவர்களில் ஒருவர் கட்சியை விட்டு வெளியேற இருப்பதை அடுத்து மாநிலத்தில் உள்ள 51 தனி தொகுதிகளிலும் பாஜக வெற்றிவாய்ப்பு கைநழுவிப் போயுள்ளது.
பெங்களூரில் உள்ள ஜெயாநகர் தொகுதியில் போட்டியிட பெங்களூரு தெற்கு மாவட்ட நிர்வாகி என்.ஆர். ரமேஷுக்கு டிக்கெட் வழங்கப்படாதைக் கண்டித்து அம்மாவட்ட பாஜக உறுப்பினர்கள் 1200 பேர் கூண்டோடு பாஜகவில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு இதுவரை வெளியான வேட்பாளர் பட்டியலில் இடமில்லாததால் அவரும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அவரை சமாதானப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மற்றொரு முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டருக்கு 99 சதவீதம் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வேட்பாளர் பட்டியல் வெளியானது முதல் கர்நாடக பாஜக-வில் பெரும் குழப்பம் நிலவி வருவதை அடுத்து பெங்களூரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை அதிருப்தியாளர்கள் முற்றுகையிட்டு வருவதால் அங்கு பரபரப்பாக காணப்படுகிறது.
மேலும், பாஜக-வுக்கு வெற்றிவாய்ப்பு உள்ள தொகுதிகளில் உட்கட்சி பூசல் காரணமாக போட்டி வேட்பாளர்கள் அதிகரித்துள்ளதை அடுத்து அந்த தொகுதிகளிலும் பாஜக வெற்றிவாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.