நியூயார்க்:
மெரிக்காவில் தேர்தல் நிதியை ஆபாச நடிகைக்கு கொடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த, முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும் அவர் போலீசாரின் கண்காணிப்பில் இருப்பார். அமெரிக்காவில் அதிபராக இருந்த ஒருவர் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளாவது இதுவே முதன்முறை.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும், தனக்கும் தொடர்பு இருந்ததாக ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் என்பவர் கடந்த 2006ம் ஆண்டு முதல் குற்றம் சாட்டி வந்தார். இதுகுறித்து ஊடகங்களில் தெரிவிக்கப் போவதாக கடந்த 2016ம் ஆண்டு அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து ட்ரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோச்சன் என்பவர், ஸ்டார்மி டேனியல்ஸுக்கு சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களைக் கொடுத்து சமரசம் செய்தாகக் கூறப்படுகிறது. இவ்வாறு அளிக்கப்படும் பணம் ஹஷ் மணி என குறிப்பிடப்படுகிறது. இந்தப் பணம் ட்ரம்பின் தேர்தலுக்காக வழங்கப்பட்ட பணம் என்பதால் வணிகப் பதிவுகளை பொய்யாக்கியதாக அவர் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் இன்று முன்னாள் அதிபர் டிரம்ப் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அதையடுத்து, தொடர்ந்து டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் போலீசார் கைது செய்தனர். எனினும் அவருக்கு கை விலங்கு போடப்படவில்லை. தொடர்ந்து நீதிபதி முன்பாக டொனால்டு டிரம்ப் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள 34 குற்றச்சாட்டுகளை அவரிடம் எடுத்துக் கூறிய நீதிபதி, அவருக்கு இருக்கும் உரிமைகளையும் விளக்கினார். அப்போது டிரம்ப் தான் எந்தவொரு குற்றத்தையும் செய்யவில்லை வாதிட்டார். தனது வழக்கறிஞர்கள் குழுவுடன் நீதிமன்ற அறையில் இருந்த டொனால்டு டிரம்ப் மிகவும் இறுக்கமான முகத்துடன் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றச்சாட்டு பதிவு நடைமுறைகள் முடிந்த பிறகு நீதிமன்றத்தில் இருந்து டிரம்ப் வெளியேறினார்.