அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்கக் கோரி ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு நேற்று தள்ளுபடி செய்தார்.
பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடையில்லை என்று தீர்ப்பு வந்ததை அடுத்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இரண்டு நீதிபதிகள் அமர்வு முன்பு ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு செய்துள்ளதோடு எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவியேற்றது செல்லாது என்றும் அறிவிக்கக் கோரி மனு அளித்துள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனுமீதான விசாரணை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் முன்பு இன்று நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கில் தனது தரப்பு வாதங்களைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.