காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ததைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட அரசு இல்லத்தை ஏப்ரல் 22 ம் தேதிக்குள் காலி செய்யக் கோரி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதானி விவகாரம் தொடர்பாக கேள்வியெழுப்பிய நிலையில் ராகுல் காந்தியின் குடும்ப பெயர் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தனது தரம் தாழ்ந்து விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து சூரத் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு தொடர்பாக வெளியான தீர்ப்பை அடுத்து ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து மக்களவை செயலகம் தகுதி நீக்கம் செய்தது.
இதனையடுத்து ராகுல் காந்தியின் அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும் என்று லோக்சபா வீட்டு வசதி கமிட்டி இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி துக்ளக் சாலையில் உள்ள ராகுல் காந்தியின் அரசு பங்களாவை 2023 ஏப்ரல் 22 க்குள் காலி செய்ய வேண்டும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய பாஜக அரசு ராகுல் காந்தி மீது தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருவதுடன் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த காங்கிரஸ் கட்சி எம்.பி. பிரமோத் திவாரி “ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டுள்ள Z+ பாதுகாப்பை மேற்கோள் காட்டி துக்ளக் சாலையில் அமைந்துள்ள அரசு பங்களாவில் தங்க அனுமதிக்க வேண்டும்” என்று கூறினார்.