இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள காங்கேசன் துறைக்கும் புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் ஏப்ரல் 29 ம் தேதி துவங்கும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இருநாடுகளுக்கும் இடையிலான இந்த கப்பல் போக்குவரத்தை யார் எங்கிருந்து முதலில் கொடியசைத்து துவக்கி வைப்பார்கள் என்ற விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
விடுதலைப் புலிகளுடனான போரில் பெருமளவு சேதமடைந்த காங்கேசன்துறை துறைமுகத்தை இந்திய அரசின் பெரும்பங்களிப்பில் மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இதன்மூலம் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் வர்த்தகம் செய்து வரும் இந்தியர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு இலங்கை கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில், யாழ்ப்பாணம்-காரைக்கால் பயணிகள் கப்பல் போக்குவரத்து குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்த பயணிகள் கப்பல் சேவைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 29 ம் தேதி சேவையைத் துவங்க இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
56 கடல் மைல் (100 கி.மீ.) தொலைவுள்ள காரைக்காலுக்கும் – காங்கேசன்துறைக்குமான இந்த கப்பல் போக்குவரத்துக்கு பயணிகள் ஒருவருக்கு இந்திய மதிப்பில் ரூ. 9878 (இலங்கை மதிப்பில் ரூ. 40,000) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐ.என்.டி.எஸ்.ஆர்.ஐ. என்ற கப்பல் போக்குவரத்து நிறுவனம் இந்த பயணிகள் போக்குவரத்து கப்பலை இயக்க அனுமதி பெற்றுள்ளது. முதற்கட்டமாக 120 பேர் வரை பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கப்பலில் பயணிகள் தலா 100 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.