சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்பான பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், நான் நலமுடன்தான் இருக்கிறேன் என மருத்துவமனையிலிருந்து வீடியோ வெளியிட்டு, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த 15ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாகச் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவருக்கு நெஞ்சுவலி என கூறப்பட்ட நிலையில், பின்னர் கொரோனா பாதிப்பு என கூறி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில், அவர் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இநத் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தான் நலமுடன் இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “நான் நலமுடன் இருக்கிறேன். இரு நாள்களில் வீடு திரும்புவேன்” என்று அவர் பேசியுள்ளார்.
இதற்கிடையே ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் நெஞ்சுவலி காரணமாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், மெல்ல குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதய பிரச்சினையிலிருந்தும் அவர் மீண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.