கிடங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் (Kidangoor Subramanya Temple) என்பது இந்திய மாநிலமான கேரளவின் கோட்டயம் மாவட்டத்தில் அயர்குன்னம் அருகே கிடங்கூரில் அமைந்துள்ளது.

ஒரு பழங்கால இந்து கோயிலாகும். இது கேரளாவின் புகழ்பெற்ற சுப்பிரமண்யர்கோயில்களில் ஒன்றாகும். இது குறைந்தது 1500 ஆண்டுகள் பழமையானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பரசுராமர் ஸ்தாபித்த 64 கிராமங்களில் கேரளாவில் 32, கர்நாடகாவில் 32 அமைந்துள்ளன. அதில் கிடங்கூரும் அடங்கும். தென்னிந்தியாவில் மிகப்பெரிய அளவில் அமைந்துள்ள முருகன் கோயில்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலில் பெருமாள் சன்னதியும் இருக்கிறது. முருகன் சன்னதி எதிரே கொடி மரம், பலிபீடம் உள்ளது. கேரள கோயில்களிலேயே இது தான் மிக உயரமான கொடி மரம். கொடி மரத்தின் மேல் ஒரு மயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள கூத்தம்பலம், மருத்துவ குணம் கொண்ட குறுந்தொட்டி என்ற மரத்தினால் உருவாக்கப்பட்டது. இந்த அம்பலத்தில், இராமாயண, மகாபாரத காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் பரத முனிவரது நாட்டிய சாஸ்திர வடிவங்களும் உள்ளன. திருவிழா காலங்களில் இங்கு பழங்கால கலையான கூத்து, கூடியாட்டம் நடக்கிறது. அதில் மலைநாட்டின் (கேரளம்) பழமை பற்றி கூறப்படுகிறது. இந்த கூத்தில் முருகனைக் குறித்த “பிரம்மச்சாரி கூத்து” என்பது இப்பகுதி மக்களின் ரசனையைப் பெற்றது.

கூத்தம்பலத்தின் உள்ளே புவனேஸ்வரி அம்மன் அருள் செய்கிறாள். இவளுக்கு, செவ்வாய், வெள்ளியில் குருதி பூஜை நடக்கிறது. வழக்குகளில் ஜெயிப்பதற்காகவும், தொழில் போட்டியை சமாளிக்கவும், எதிரிகளின் ஆதிக்கத்தை தடுக்கவும் இந்த பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். பெண்களுக்கு அனுமதியில்லை.

இங்குள்ள முருகன் பிரமச்சாரி கோலத்தில் காட்சி தருகிறார். பிரம்மச்சாரியான கவுன மகரிஷி, வனமாக இருந்த இப்பகுதியில் தவம் செய்து வந்தார். இராவண வதத்திற்காக சென்ற இராமபிரான், திரும்பி வரும்போது கவுன மகரிஷியை சந்திப்பதாக கூறியிருந்தார். ஆனால், அவர் வரவில்லை. சீதையுடன் ஊர் திரும்பும் மகிழ்ச்சியில், தன்னை இராமன் மறந்து விட்டதாக கருதிய அவர், இல்லறத்தில் இருப்பதால் தான் இத்தகைய இக்கட்டான நிலைமை உண்டாவதாகக் கருதினார். இந்த மகரிஷிக்கு முருகன் இஷ்ட தெய்வமாக இருந்தார். இராமனிடம் கோரிக்கை வைத்து நிறைவேறாதது போல, முருகப்பெருமான் இல்லறத்தில் ஈடுபட்டாலும், தனது கோரிக்கைகளை கவனிப்பாரோ மாட்டாரோ என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டார். அந்த சிந்தனையுடனேயே முருகனுக்கு ஒரு சிலை வடித்தார். “பிரம்மச்சாரி முருகன்” என பெயர் சூட்டி பிரதிஷ்டை செய்து விட்டார். அதுவே இந்த தலத்தில் இருக்கிறது. இல்லறத்தில் இருப்பவர்களால் எதிலும் கவனம் செலுத்த இயலாது என்ற கருத்தின் அடிப்படையில் கவுனமகரிஷி “பிரம்மச்சாரி முருகன்” சிலையை பிரதிஷ்டை செய்ததால், முருகன் சன்னதிக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கொடிமரம் அருகே நின்றபடி தான் முருகனைத் தரிசிக்கலாம். கேரள கோயில்களிலுள்ள வழக்கமான முறைப்படி ஆண்கள் சட்டை அணிந்து செல்லக்கூடாது. மிக பழமையான இந்தக் கோயில் “மீனாச்சில்” நதிக்கரையில் அமைந்துள்ளது. கோயில் சுற்றுப்பகுதியில் பெருமாள், பகவதி, ஐயப்பன் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் “பகித்தாசரி” என்ற வாஸ்துபடி கட்டப்பட்டது.

ஒரு சில தம்பதிகள் குழந்தை வரம் வேண்டி இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். அவர்களும் தம்பதி சமேதராக முருக சன்னதிக்குள் செல்ல முடியாது. கணவன் மட்டுமே உள் செல்ல, மனைவி கொடிமரம் அருகில் நின்று குழந்தை வரம் கேட்கும் வித்தியாசமான காட்சியை இங்கு காணலாம். குழந்தை பிறந்த பிறகு, இத்தலத்தின் முக்கிய பிரார்த்தனையான “பிரம்மச்சாரி கூத்து” நிகழ்ச்சியை தங்கள் செலவில் நடத்துகிறார்கள்.
உடல்நலம் வேண்டி பஞ்சாமிர்த அபிஷேகமும், திருமணத்தடை நீங்க சுயம்வர அர்ச்சனையும் செய்யப்படுகிறது.
[youtube-feed feed=1]