நாகர்கோவில்:  7 நாள் பயணமாக பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, நேற்று கேரளா வந்த நிலையில், இன்று காலை கன்னியாகுமரி வருகை தந்தார். அவரை கவர்னர் ஆர்என்ரவி,  அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் வரவேற்றார்.

6 நாள் பயணமாக 15ந்தேதி அன்று  கேரளா வந்த திரவுபதி முர்மு, 2 நாட்கள் அங்கு பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தார். தற்போது திருவனந்தபுரத்தில் தங்கி இருக்கும் அவர், இன்று ஒருநாள் பயணமாக குமரிக்கு வருகை தந்தார்.  திருவனந்தபுரத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு காலை 9 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை மைதானத்தில் வந்து இறங்கினார்.

குமரி வருகை தந்த குடியரசு தலைவர் முர்முவை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

அதைத்தொடர்ந்து, காலை 9.30மணி அளவில்  கன்னியாகுமரி படகு துறைக்கு வந்தார். அவரை அமைச்சர் மனோ தங்கராஜ் வரவேற்று அழைத்துச் சென்றார். அங்கிருந்த சொகு படகில், கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகில் சென்றார். விவேகானந்தர் பாறையில் அவரை விவேகானந்தா கேந்திர நிர்வாகிகள் வரவேற்கின்றனர். பின்னர் அவர் நினைவு மண்டபத்தை சுற்றி பார்க்கின்றனர். தொடர்ந்து அங்குள்ள தியான மண்டபத்துக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறிது நேரம் அங்கு தனியாக அமர்ந்து தியானம் செய்கிறார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி கன்னியாகுமரி முழுவதும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் கன்னியாகுமரி, விவேகானந்தபுரம் பகுதிகளில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

[youtube-feed feed=1]