கோவை: தமிழ்நாட்டில் மீண்டும் ஒமிக்ரான் வகை கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் மீண்டும் கொரோனா வார்டு திறக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக புளு காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், சமீப நாட்களாக ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவலும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மாநில சுகாதாரத்துறை காய்ச்சல் முகாம்கள் நடத்தி நோய் பரவலை கட்டுப்படுத்தி வருகிறது.
குறிப்பாக கோவை மாவட்டத்தில், கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.கொரோனா பாதிப்பில், தமிழ்நாட்டிலேயே கோவை மாவட்டம் தற்போது முதலிடத்தில் உள்ளது. கோவை மாவட்டத்தில் கோவை மற்றும் புறநகர்பகுதிகளில் பரவல் அதிகம் உள்ளதால், 462 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் 13 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு அரசு மருத்துரவமனையில், , 30 படுக்கைகளுடன் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் நிர்மலா, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளவர்களை உள்நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை அளிக்க 30 படுக்கையுடன் கூடிய தனி வார்டு திறக்கப்பட்டுள்ளது.
இந்த வார்டில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுவார்கள். மருந்துகள் மற்றும் மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் தடுப்பூசிகளும் உள்ளன. சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாக வழிகாட்டுதலின்படி அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரம் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் இன்புளூயன்சா பரவல் உள்ளது. எனவே அங்கும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் 100 முகாம்கள் நடத்தப்படுகிறது.
காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உரிய சிகிச்சை பெற்று 3 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த காய்ச்சல் முதல் 3 நாட்கள் அதிகமாக இருக்கம் என்பதால் வீட்டில் உள்ளவர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே தனிமைப்படுத்துவதன் மூலம் காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியும். பொதுமக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளவர்கள், மூச்சுவிட சிரமப்படுபவர்கள் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
இவ்வாறுஅவர் கூறினார்.