டெல்லி: ரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெற்றது தொடர்பான வழக்கில், முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவுக்க 4வது முறையாக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. அதுபோல, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தெலுங்கானா முதல்வர் கேசிஆரின் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.
கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தபோது ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் பாட்னாவை சோ்ந்த சிலா் நியமிக்கப்பட்டனா். அதற்குக் கைம்மாறாக வேலை பெற்றவா்கள் அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான சுமாா் 1.05 லட்சம் சதுரஅடி நிலத்தை, லாலு குடும்பத்தினா் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டனா்.
இதுதொடர்பான புகாரின்பேரில், சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில், அந்த நிலத்தை சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு லாலு குடும்பத்தினா் நேரடியாக வாங்கி ஊழல் செய்துள்ளது தெரிய வந்ததுது. இதுதொடர்பாக சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து லாலுவின் வீடு உள்பட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த ஊழலில், லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சிபிஐ தொடர்ந்து நான்காவது முறையாக இன்று சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே, பிப்ரவரி 24ஆம், மார்ச் 4, 11 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. மனைவியின் உடல்நிலையைக் காரணம் காட்டி மூன்று சம்மன்களைத் தவிர்த்த நிலையில், தற்போது 4வது முறையாக மார்ச் 25ம் தேதியன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
அதுபோல, டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக பிஆர்எஸ் எம்எல்சி மற்றும் தெலுங்கானா முதல்வரின் மகள் கே கவிதாவுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பி மார்ச் 20ஆம் தேதி ஆஜராகுமாறு கூறியுள்ளது. முன்னதாக கவிதா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நிலையில், அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பி உள்ளது.