டெல்லி: நாடாளுமன்றத்தில் எனது கருத்தை சொல்ல உரிமை உள்ளது; ஆனால் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. நாளை பேச அனுமதிக்கப்படுவேன் என்று நம்புகிறேன் என்றவர் இந்தியாவை அவமதிக்கும் விதமாக நான் எந்த கருத்தையும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் தெரிவிக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அண்மையில் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி ராகுல், இந்திய ஜனநாயகம் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அங்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆளும் கட்சியின் கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கிறோம் என ஆளும் பாஜக அரசு பற்றி குற்றம் சாட்டி இருந்தார். ராகுல் லண்டன் சென்று இந்தியாவின் ஜனநாயகம் குறித்து பேசியது பெரும் விவாதத்தை கிளப்பியது. இந்திய ஜனநாயகம் குறித்து தவறான முறையில் வெளிநாட்டில் பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும், இந்தியாவை ராகுல்காந்தி அவமதித்து விட்டார் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் நாடாளுமன்ற இருசபைகளிலும் கூறி வந்தனர். இதனால் பாராளுமன்ற இரு அவைகளும் இன்று 4வது நாளாக முடங்கி உள்ளது.
இந்த நிலையில் ராகுல் இன்று அவையில் பங்கேற்பார் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இந்த நிலையில் தான் லண்டனில் இருந்து நாடு திரும்பிய ராகுல் காந்தி இன்று நாடாளுமன்றம் வந்தார். சபைகள் முடங்கி உள்ளதால் ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்தார். முன்னதாக அவைத்தலைவரை சந்தித்து பேசினார்.
இதையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராகுல், சில நாட்களுக்கு முன்பு, நான் அவையில் மோடிஜி & அதானிஜி மீது கேள்விகளை எழுப்பி ஒரு பேச்சு கொடுத்தேன், அந்த பேச்சு அவையில் இருந்து நீக்கப்பட்டது. இந்த உரையில் நான் தனிப்பட்ட வகையில் எதுவும் பேசவில்லை. பொது பதிவுகளில் இருந்து எடுக்கப்பட்டதையே பேசினேன் என்றார்.
இந்தியாவை அவமதிக்கும் விதமாக நான் எந்த கருத்தையும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் தெரிவிக்கவில்லை என்றவர், இன்று காலையில் நாடாளு மன்றத்துக்குச் சென்று சபாநாயகரிடம் (லோக்சபா) அவை பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரினேன் என்றவர், மத்திய அரசாங்கத்தின் நான்கு அமைச்சர்கள் என் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்,
எனவே எனது கருத்துக்களை அவையில் வைக்க எனக்கு உரிமை உள்ளது. நாடாளுமன்றத்தில் எனது கருத்தை சொல்ல உரிமை உள்ளது; ஆனால் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. நாளை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்படுவேன் என்று நம்புகிறேன். நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதால், பேச வாய்ப்பு கிடைப்பது எனது ஜனநாயக உரிமை. இந்திய ஜனநாயகம் செயல்பட்டிருந்தால் என்னால் நாடாளுமன்றத்தில் பேச முடியும். எனவே, உண்மையில் நீங்கள் பார்ப்பது இந்திய ஜனநாயகத்தின் மீதான சோதனை என்றார்.
முன்னதாக ராகுல் அவைக்கு வருவது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் தனது டிவிட்டர் பதிவில்,”இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் … அங்கு சந்திக்கலாம் அனுராக் தாக்கூர், ஸ்மிருதி” என்று ராகுல் காந்தியின் படத்தினை பகிர்ந்திருந்தார்.
ராகுல் காந்தியின் லண்டன் பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வந்த அமைச்சர்களில் தாக்கூரும், ஸ்மிருதியும் முன்னிலையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி,” மிஸ்டர் காந்தி, நாட்டில் ஜனநாயகம் ஒன்றும் அழிவில் இல்லை. ஆனால், வெளிநாட்டில் நீங்கள் நடந்து கொண்ட உங்களின் இந்த நடவடிக்கையால், காங்கிரஸின் அரசியல் அழிவில் உள்ளது” என்று விமர்சித்திருந்தார்.
அதுபோல மற்றொரு மத்திய அமைச்சரான அனுராக் தாக்கூர் கூறுகையில், ”அவர் (ராகுல் காந்தி) வெளிநாட்டு மண்ணில், வெளிநாட்டு நண்பர்களிடம், வெளிநாட்டு செய்தித்தாள்கள், ஊடகங்களிடம் எவ்வளவு உதவிகள் கேட்டாலும் அதனால் எந்த பயனும் இல்லை. வெளிநாட்டவர்கள் இந்தியாவில் ஆளுமை செலுத்த முடியாது. நீங்கள் இந்தியாவில்தான் வாக்கு செலுத்த வேண்டும். இங்கிலாந்திலோ, அமெரிக்காவிலே இல்லை. அதனால் உங்களின் கேம்ரிட்ஜ் அழுகை, லண்டன் பொய்களை விட்டுவிட்டு நாடாளுமன்றத்திற்கு வந்து மன்னிப்பு கேளுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.
சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “ராகுல் காந்தி லண்டன் கருத்தரங்கில் பேசியது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் நமது ஜனநாயகம், நீதித்துறை மற்றும் தேசத்தை அவமதித்துவிட்டார். நமது நாட்டிற்கு எதிராக பேசுபவர்களுக்கு எதிராக நாம் வலுவாக குரல் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், ராகுல் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனகார்கே, “நாடாளுமன்றத்தை இயங்க விடமாமல் செய்யவும், அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரும் எங்களின் கோரிக்கையை நிராகரிக்கவுமே பாஜக இவ்வாறு செயல்படுகிறது.
நாட்டில் அதிகரித்து வரும், வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் பற்றி எல்லாம் விவாதிக்க அரசு தயாராக இல்லை. மோடி பலமுறை வெளிநாட்டு மண்ணில் இந்தியாவிற்கு எதிராக பேசியிருக்கிறார் என்றும் கூறினார்.