டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள 45 கேந்திரிய வித்யாலயாவில் 15 பள்ளிகளில் மட்டும் தமிழ் பாடம் கற்பிக்கப்பட்டு வருவதாக உறுப்பினரின் கேள்விக்கு மத்தியஅரசு பதில் கூறியுள்ளது. அதுபோல ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்தும் பதில் கூறினார்.
தமிழ்நாட்டில் உள்ள மத்தியஅரசின் கேந்திரிய வித்யிலயா பள்ளிகளில் தமிழ்பாடம் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்துள்ள பதிலில், கேந்திர வித்யாலயா பள்ளிகளில் சேரும், தமிழ் மாணவர்கள், தமிழ் விருப்பபாடமாக கேட்டால்தான் தமிழ் கற்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 15 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் விருப்பம் தெரிவித்தால் மட்டுமே மாநில மொழிகள் பயிற்றுவிக்கப்படுகிறது
அதன்படி, மாநிலத்தில் மொத்தமுள்ள 45கேந்திரியா வித்யாலாயா பள்ளிகளில், 15பள்ளிகளில் மட்டுமே மாணவர்களின் விருப்பத்தின் பேரில், தமிழ் கற்பிக்கப் பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும் 57,220 மாணவர்கள் தமிழ் படிக்காதது அம்பலமாகியுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ் பாடமாக கற்பிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும் 63,809 மாணவர்களில் 6,589 மாணவர்கள் மட்டுமே தமிழ் படிக்கின்றனர். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் உருவாக்கும் பாடத்திட்டத்தை பின்பற்றுகிறது.
நாடு முழுவதும் உள்ள மாணவர்களை கருத்தில் கொண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுவதால் கூடுதல் மொழியாக மட்டுமே மாநில மொழிகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
அதுபோல, டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்துள்ளதா? என்றும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய நடவடிக்கை தொடர்பாகவும் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்பது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய அரசின் தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற “டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்” தற்போது 9ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி 19ம் தேதி தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தவுடன் பல்கலைக்கழக நிர்வாகம் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும், தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் இயல்பு நிலை திரும்பி உள்ளதாகவும் மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 4 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.