புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 9ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று (மார்ச் 13ந்தேதி) மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி, 12 ஆண்டுகளுக்கு பின் இன்று முழு பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி சட்டசபையில் கடந்த 12 வருடங்களாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. பொதுவாக மார்ச் மாதங்களில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு, முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. முன்னதாக, இந்த பட்ஜெட்டிற்கு, முதலமைச்சர் ரங்கசாமி, மாநில ஆளுநர் தமிழிசை ஆகியோர் மத்தியஅரசிடம் கூடுதல் நிதி வழங்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முழு பட்ஜெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
பட்ஜெட் தொகையாக ரூ. 11,600 கோடி நிர்ணயித்து திட்டக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்பின் தமிழிசை தலைமையில் குழு கூட்டத்தின் முடிவுகள் மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பியது. இதையடுத்து பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, இன்று முதல்முறையாக முழு பட்ஜெட் தாக்கல் ஆகிறது. மத்திய அரசு பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளித்த நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் ஆகிறது. கடந்த பட்ஜெட்டை விட இந்த முறை ரூ. 1000 கோடி அதிகம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாநில அரசு சார்பில், பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது