சென்னை: அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக அனைத்து கோயில்களுக்கும் ஒரே விண்ணப்பத்தை பதிவேற்ற நீதிமன்றம் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே நீதிமன்றம் அறிவித்தபடி விண்ணப்பம் இல்லை என தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம், இன்றைக்குள் புதிய விண்ணப்பத்தை பதிவேற்றும்படி அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், இந்துக்கள் அல்லாதவர்களை அதிகாரிகளாகவும், அரசியல் கட்சியினரை அறங்காவலர் களாகவும் தமிழ்நாடு அரசு நியமித்து வருகிறது. இதனால், கோவில் ஆகமங்கள் சிதைக்கப்படுவதாகவும், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதாகவும் ஏராளமான புகார்கள் உள்ளனது.
இதுதொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு, அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பத்தில் தெய்வபக்தி மற்றும் அரசியல் சார்பு உள்ளிட்ட விவரங்களைப் பெறவேண்டும் என்றும் அறங்காவலர் நியமனம் தொடர்பான விரிவான அறிக்கையை அறநிலையத்துறை தாக்கல் செய்யவேண்டும் என்றும்கூறியது.
ஆனால், அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக அனைத்து கோயில்களுக்கும் ஒரே விண்ணப்பத்தில் அரசியல் சார்பு தொடர்பான கேள்வி இடம்பெற வில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கியஅமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது , அறநிலையத் துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தார். அதில், அறங்காவலர்கள் பதவிக்கு, ‘ஆன்லைன்’ வாயிலாக விண்ணப்பிக்க வசதி உள்ளது. அனைத்து கோவில்களில் இருந்தும், மொத்தம் நான்கு லட்சம் விண்ணப்பங்கள் வரை பெறப்படும் என தெரிகிறது. முறையான அறங்காவலர்கள் நியமனத்தை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு விண்ணப்பத்தையும் சரிபார்க்க வேண்டியுள்ளது. இந்த நடைமுறைகளால், அறங்காவலர்கள் நியமன நடவடிக்கையை முடிக்க, கூடுதல் நேரம் தேவைப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அப்போது, அந்த விண்ணப்பத்தில் ஏற்கெனவே உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியபடி “அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம்பெறவில்லை’ என, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு, ‘ஆன்லைன் தளத்தில், அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம் பெற்றுள்ளது’ என, அறநிலையத் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, இணையதளத்தில் இடம் பெற்றுள்ள பழைய விண்ணப்பப் படிவங்களை நீக்கிவிட்டு, அனைத்து கோவில்களுக்கும் ஒரே மாதிரியான விண்ணப்பங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இப்பணியை இன்றே முடிக்க அறிவுறுத்தி, விசாரணையை வரும் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
தமிழ்நாட்டில் ஆட்சிகள் மாறும்போது காட்சிகளும் மாறுகிறது. அதுபோல ”ஒவ்வொரு கட்சி ஆட்சிக்கு வரும்போதும், அறங்காவலர் பதவியை தங்களது கட்சி சார்பான ஆட்களுக்கே தாரை வார்க்கிறார்கள். இதை தடுக்கும் வகையில், நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. , அரசியல் சார்பு கொண்ட நபர், தெய்வ நம்பிக்கை இல்லாதவர் என்றால், அவரை அறங்காவலராக நியமிக்கக்கூடாது என்று உத்தரவிட்டு உள்ளது.
மற்ற மதங்களில் சொந்த மதத்தினரே பொறுப்பாளர்களாக இருக்கும்போது, இந்து மதத்தில் மட்டும் ஏன் மாற்று மதத்தினரையும், மத நம்பிக்கையற்ற வரையும் பொறுப்பாளர்களான நியமிக்க அரசு முனைகிறது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.