சென்னை: இன்று எம்எல்ஏவாக பதவி ஏற்ற காங்கிரஸ் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன், தனக்கு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு ஆசையில்லை என தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி ஈவிகேஎஸ் இளங்கோவன், இன்று சபாநாயகர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், எம்எல்ஏவாக பதவி ஏற்றார். இதையடுத்து,  தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 20 மாத ஆட்சிக்கு மக்கள் அளித்து உள்ள அங்கீகாரம் ஆகும். கூட்டணி கட்சி தலைவர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக பணியாற்றி எனக்கு வெற்றியை தேடித் தந்து இருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பின்படி நடந்து கொள்வேன் என்றவர்,  ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்ற உழைப்பேன் என்று கூறினார்.

அப்போது, செய்தியாளர்கள், காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவராவீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு, பதில் கூறியவர், தற்போது சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராக செல்வப்பெருந்தகை உள்ளார். அவர் சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராக தொடர்ந்து செயல்படுவார். எனக்கு அந்த பதவிமீது  ஆசை இல்லை என்றார்.

தற்போதுள்ள தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களில், ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் மூத்த உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.