சென்னை: ஆவடியில் அடுத்தடுத்து 6கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து கூறிய வணிகர்கள், காவல்துறை யினரின் இரவு ரோந்து இல்லை என்றும், காவல்துறை செயலிழந்து விட்டதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.
அதுபோல போரூர் அருகே சென்னை வளசரவாக்கத்தில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுக்கடைக்கு வந்த நபர், மதுபோதையில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அங்கேயே நின்றுள்ளார். அவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதாக டிஜிபி கூறி வருவதுடன், கஞ்சா 2.0 என பல்வேறு தகவல்களை மட்டுமே கூறி வருகிறார். ஆனால், செயல்பாட்டிதும் ஏதும் இல்லாத நிலையே தொடர்கிறது.
திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளை, சென்னையில் ஷட்டர் வெல்டிங் வைத்த அறுத்த நகைக்கடையில் கொள்ளை போன்ற சம்பவங்கள் மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகள் நடைபெறுவது இல்லை, காவல்துறையினர், வாகனங்களை மடக்கி அபராதம் வசூலிப்பதிலேயே கவனம் செலுத்தி வருவதாகவும், எதிர்க்கட்சியினர் மீது காட்டும் அக்கறை கூட மக்கள் நலனில் காட்டுவது இல்லை என்றும் பொதுமக்களும், வணிகர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆவடியில் அடுத்தடுத்து 6 கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடித்த சம்பவம் வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி அடுத்த வசந்தம் நகர், ஆவடி-பூந்தமல்லி சாலையில் அமைந்துள்ள கட்டிடத்தில் அடுத்தடுத்த கடைகள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.
டிரான்ஸ்போர்ட் நிறுவனம், போட்டோ ஸ்டுடியோ, அரிசி கடை, துணிக்கடை உள்பட 6 கடைகளின் பூட்டுகளை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகள் சாதாரண கடைகள் என்பதால், அதில் அதிக அளவில் பணம் கிடைக்காத நிலை ஆவடி பூந்தமல்லி சாலையில் தமிழ்நாடு அரசின் அமுதம் கூட்டுறவு பல்பொருள் அங்காடியின் பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் வைத்திருந்த வசூல் பணம் ரூ.13 ஆயிரத்து 400 கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, வசந்தம் நகர் லோட்டஸ் தெருவில் ஹார்டுவேர்ஸ் கடையில் வைத்திருந்த ரூ.13 ஆயிரத்து 500 பணத்தை திருடி சென்றனர். இது குறித்து ஆவடி போலீசார் வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
இந்த தொடர் கொள்ளை சம்பவம் ஆவடி பகுதி மக்கள் மற்றுமி வணிர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக காவல்துறையினர் இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுவது இல்லை என்று குற்றம் சாட்டியுள்ள ஆவடி வணிகர்கள், காவல்துறையினர் மக்கள் நலனின் அக்கறை காட்ட வேண்டும், வாகனங்களை மறித்து வசூலிப்பது விடுத்து, ரோந்து பணிகளிலும் ஈடுபட்டால், இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவது தடுக்கப்பட்டு விடும் என்று தெரிவித்து உள்ளனர்.