அமெரிக்காவின் பல்வேறு துறைமுகங்களில் பொருத்தப்பட்டுள்ள சீன கிரேன்கள் மூலம் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் அவை செல்லும் இடம் குறித்த விவரங்களை சீனா வேவு பார்ப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா தான் காரணம் என்று கடந்த மூன்றாண்டுகளாக கூறிவரும் அமெரிக்கா இன்றுவரை ஆதாரபூர்வமாக அதை நிரூபிக்கவில்லை.
இந்த நிலையில் தனது நாட்டு வான்வெளியில் பலூனை பறக்க விட்டு வேவு பார்ப்பதாக கடந்த மாதம் அமெரிக்கா கூறியதை அடுத்து உலக நாடுகள் பலவும் எங்கள் நாட்டின் மீதும் சீன பலூன் பறப்பதை பார்த்தோம் என்று வழிமொழிந்தன.
இந்த விவகாரம் தற்போது அடங்கி இருக்கும் நிலையில், தற்போது துறைமுகங்களில் பொருத்தப்பட்டுள்ள கிரேன்கள் மூலம் அமெரிக்க ராணுவ தளவாடங்கள் எங்கிருந்து வருகிறது எங்கு செல்கிறது அதில் என்னென்ன பொருட்கள் உள்ளது போன்ற தகவல்களை சீனா வேவு பார்ப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற கணக்காக அமெரிக்கா செயல்பட்டு வருவதாக இந்த விவகாரம் குறித்து சீனா கருத்து தெரிவித்துள்ளதோடு, அமெரிக்கா இதே மனநிலையுடன் தொடர்ந்து செயல்படுவது அதன் வளர்ச்சியை பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
சமீபகாலமாக சீனாவில் தயாரிக்கப்பட்ட பிற உபகரணங்களான பேக்கேஜ் -ஸ்கிரீனிங் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரிக் டிரான்ஸ்பார்மர்கள் குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க துறைமுகங்களில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கிரேன்கள் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து கடந்த டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவை ஏற்றுக்கொண்ட அமெரிக்க நாடாளுமன்றம் இதுகுறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.