சென்னை:  தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும்  டிவிட் பதிவிட்ட உ.பி. மாநில பாஜக செய்தி தொடர்பாளர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் 3 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள்மீது தாக்குதல் நடைபெற்றதாக சில வீடியோக்கள் வைரலான நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்த காவல்துறை யினர், அது தவறான தகவல் என்று கூறியதுடன், வதந்திகள் பரப்புவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது. மேலும், வடமாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு செல்வதை தடுக்கும் பணியில் அரசு அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர்களும் செயலாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இந்தியில் பேசியதால், பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் கழுத்தறுத்து கொல்லப்பட்டதாக டிவிட் பதிவிட்ட, உ.பி.மாநில பாஜக செய்தி தொடர்பாரும், கோவா மாநிலத்திற்கான இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிலை வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ரா மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

பொதுஅமைதிக்கு குத்தகம் விளைவித்ததாகவும், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியது உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.

மேலும், சமூக வலைதளங்களில் யார் வதந்தி பரப்புகிறார்கள் என போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது வதந்தி பரப்பியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. திருப்பூரில் 2 பேர் மற்றும் தூத்துக்குடியில் ஒருவர் என மொத்தம் 3 பேர் மீது தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மூவரும் தற்போது தலைமறைவாகி உள்ளதாகவும், அவர்களை பிடிக்கும் பணியானது தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.