மதுரை: நுகர்வோர்கள் ஆவின் மாத அட்டை மூலம் பால் வாங்குபவர்கள், தங்களது பால் அட்டை எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என ஆவின் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
மத்திய மாநில அரசுகள் வழங்கும் சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின், தற்போது முதலமைச்சராக இருக்கும்போது, ஆதார் எண் கட்டாயம் என அறிவித்துள்ளார். ஏற்கனவே பல்வேறு அரசு திட்டங்களுக்கு ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளதுடன், மின்வாரிய எண்ணுடனும் ஆதார் எண் இணைக்கப் பட்டது.
இந்த நிலையில், தற்போது, ஆவின் மாதாந்திர பால் கார்டு பெறும் நுகர்வோர்கள், மாதாந்திர கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் அரசின் பொதுத்துதுறை நிறுவனமான ஆவின் மூலம் தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது 25 லட்சம் லிட்டர் முதல் 30 லட்சம் லிட்டர் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் பால் விலையை உயர்த்தியபோதிலும் மக்கள் அதன் தரத்தின் மீது நம்பிக்கை வைத்து விரும்பி வாங்குகின்றனர். பால் தட்டுப்பாடு இல்லை என்று ஆவின் அதிகாரிகள் மறுத்தாலும் பல நகரங்களில் பால் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் வேறு வழியின்றி தனியார் நிறுவனங்களின் பாலை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
சமீப காலமாக தென்மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் அரசு என மாநில பால் நுகர்வோர் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது,.
இந்த நிலையில், ஆவின் அட்டை மூலம் பால் வாங்கும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் இதற்கான பணியை மேற்கொள்ளுமாறும் மாவட்டம் தோறும் மண்டல வாரியாக உள்ள அலுவலர்களுக்கு ஆவின் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
ஆவின் பால் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஆவின் நிர்வாகம் பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர அட்டைகளை சலுகை கட்டணத்துடன் வழங்கி வருகிறது. இந்த நிலையில், அவர்கள், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆவினின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. ஒரு ஆதார் அட்டைக்கு தினமும் ஒரு லிட்டர் பால் மட்டுமே வழங்கப்படும் என்ற தகவலும் பரவுகிறது. சில குடும்பங்களில் உறுப்பினர்கள் அதிகம் இருக்கும்பட்சத்தில் பால் அதிகமாக வாங்க வேண்டும் என்றால் அதற்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாமா என கேள்வி எழுப்புகின்றனர்.
இதுகுறித்து மதுரை ஆவின் பொதுமேலாளர் சாந்தி கூறும்போது, ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் நேரடியாக ஆவின் நிறுவனத்தில் பணம் செலுத்தி அட்டையைப் புதுப்பிக்கின்றனர். இவர்களுக்கு அரை லிட்டருக்கு 50பைசாவும், ஒரு லிட்டருக்கு 1ரூபாய் வரை சலுகை கிடைக்கிறது.
நுகர்வோருக்கு ஆவின் பால் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் ஆதார் எண்களைச் சேகரிக்கிறோம். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோர் இருந்தாலும், அட்டைதாரர்களாக இணைந்து ஆதார் எண்களை வழங்கலாம். ஆவின் வாடிக்கையாளர் என்ற அடையாளத்துக்காக மட்டுமே ஆதார் எண்ணை சேகரிக்கிறோமே தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை
.ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு லிட்டர் பால் மட்டுமே என யாரேனும் கூறினால் மக்கள் அதை நம்பவேண்டாம் என்றார்.