ராமேஸ்வரம்:
ச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது.

தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடல் பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் கல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 18 மைல் கல் தொலைவிலும் இந்த தீவு அமைந்துள்ளது.

இந்த தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் இந்த ஆலய திருவிழா பிப்ரவரி மாதம் இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலோ நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று தொடங்கி, நாளை வரை 2 நாட்கள் நடக்கிறது.

விழாவை முன்னிட்டு இன்று மாலை 4.30 மணிக்கு அந்தோணியாரின் உருவம் பதித்த கொடி ஆலயம் முன்புள்ள கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது. இதைத் தொடர்ந்து 14 இடங்களில் சிலுவைப்பாதை திருப்பலி மற்றும் திருவிழா திருப்பலி, நற்கருணை ஆசீர், இரவு தேர்பவனி ஆகியவை நடக்கிறது.

நாளை காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறை மாவட்ட பிஷப் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. இதன் பின்னர் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.

இன்றும், நாளையும் நடைபெறும் விழாவில் இந்திய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராமேஸ்வரத்தில் இருந்து 72 படகுகளில் 2400 பேர் பயணம் செய்துள்ளனர்.