சென்னை: தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுயுடன் முடிவடைகிறது. இதற்குமேல் அவகாசம் தர முடியாது என்று மின்வாரியம் அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில், 2கோடியே 30லட்சம் வீட்டு மின் இணைப்புகளும்,  22லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11லட்சம் குடிசை மின் இணைப்புகளும் பயன்பாட்டில் உள்ளன. உள்ளன. இதில் வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. மேலும், விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த 100 யூனிட் மின்சாரம் பெறுவதில் பல குளறுபடிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் மானியம் பெறக்கூடிய மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளி யிட்டிருந்தது.  அதன்படி கடந்த ஆண்டு (2022)  நவம்பர் 15ஆம் தேதி முதல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது.

ஆதார் எண்ணை இணைப்பதற்காக மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  முதல்கட்டமாக  மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 31-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. பின்னர், அது மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. இருந்தாலும் முழுமையாக இணைக்காத காரணத்தால், இறுதியாக பிப்ரவரி 15ந்தேதி வரை அவகாசம் என கூறப்பட்டது. ஆனால்,  பின்னர் மேலும் சில நாட்கள் அவகாசம் கொடுத்து பிப்ரவரி 28ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

இதன் காரணமாக,   மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம்  இன்றுடன் (பிப்ரவரி 28 ) முடிவடைகிறது. இதுவரை இணைக்காதவர்கள் இன்றே இணைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்குமேல் அவகாசம் வழங்கப்படாது என்று மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இன்று மாலைக்குள் மின் – ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் வலியுறுத்தி உள்ளது.

இதுவரை 99 சதவீதம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மீதவுள்ளவர்களும் இன்றைக்குள் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கம் சென்று இணைக்கலாம். http://www.tangedco.gov.in என்ற பக்கம் சென்று இணைக்கலாம். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள். மேலும் அவகாசம் வழங்கப்படாது என மின்வாரியம் திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளது.