சென்னை: இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதியம் 3மணி நிலவரப்படி 59.28% வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் மாலை 6மணி வரை வாக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும் மாவட்ட தேர்தல் அதிகாரி சிவகுமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே வாக்குப் பதிவு தொடர்ந்து வருகிறது. மாலை 3மணி நிலவரப்படி, 59.28% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அலுவலர் சிவகுமார், வாக்களிக்கச் செல்லும் வாக்காளர் தனது வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்றும் ஆதார் கார்டு மூலமும் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக கூறினார்.
மேலும், வாக்குப்பதிவு முடியும் வரை அமைதியான சூழல் நிலவுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாலை 6 மணிக்கு வரிசையில் நிற்கும் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையாக ஆய்வு செய்த பிறகே பயன்படுத்தப்படுகின்றன. எந்தவித ஆதாரமும் இன்றி புகார் அளித்தால் போலீசில் ஒப்படைக்கப்படுவர் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.