திருமலை: திருப்பதி கோவிலில்  இனிமேல் ஓலைப்பெட்டி மூலம்  லட்டு பிரசாதம் வினியோகம் செய்ய முடிவு செய்துள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

திருமலை திருப்பதி திருக்கோயிலில் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்த லட்டு தனித்துவமானது, பக்தர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.  கடந்த நிதியாண்டில் லட்டு விற்பனை மூலம் 365 கோடி ரூபாய் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வருவாய் ஈட்டி உள்ளது. அதே சமயம் இந்த நிதியாண்டில் உண்டியல் வருவாய் ஆனது ஆயிரம் கோடி கிடைக்கும் எனத் தேவஸ்தானம் எதிர்பார்த்துள்ளது. தற்போது லட்டு பிரசாதம் பிளாஸ்டிக் கவர்களில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், சுற்றுச்சூழலுக்கு பாதகம் ஏற்படுவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து சணல் பை பயன்படுத்தப்பட்டது. ஆனால் லட்டுகளில் உள்ள நெய்யை சணல் உறிஞ்சி விடுவதால் சுவை பாதிக்கப்படுவதாக புகார் எழுந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.  பின்னர் அட்டை பெட்டிகளில் வழங்கப்பட்து. அதிலும் புகார்கள் எழுந்ததால் மீண்டும் பிளாஸ்டிக் கவர்களிலேயே வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இனிமேல்  பனை ஓலையிலான பெட்டிகளில் லட்டு விற்பனை செய்ய தேவஸ்தான் முடிவு செய்துள்ளது.

அதற்காக, பனை ஓலைகளால் தயார் செய்யப்பட்ட பெட்டிகள், கூடைகளின் பயன்பாட்டை திருப்பதி தேவஸ்தானம் நடைமுறைப்படுத்தி உள்ளது. அதன்படி பக்தர்களுக்கு வினியோகிக்கும் லட்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் பல்வேறு அளவுகளில் பனை ஓலைகளால் செய்யப்பட்ட பெட்டிகள், கூடைகளை திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டியிடம் வேளாண் விஞ்ஞானி விஜயராம் வழங்கினார். இவை விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும், இதன் மூலம் பனை ஓலை பெட்டிகள், கூடைகள் விரைவில் லட்டு கவுண்ட்டர்களில் பயன்படுத்தப்படும் என்றும் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தெரிவித்தார்.

இதற்காக பனை ஓலை, தென்னை ஓலை ஆகியவற்றால் தயார் செய்யப்பட்ட ஓலைப்பெட்டிகளை கவுன்ட்டர்கள் அமைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 10 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய் ஆகிய விலைகளில் ஓலைப்பெட்டிகளை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது இதன் மூலம் சுற்றுச்சூழல் காப்பாற்றப்படும் என்றும் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.