ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குகள் பதிவாகி யுள்ளது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆண்கள், பெண்கள் எத்தனை பேர் வாக்களித்துள்ளனர் என்ற விவரமும் வெளியிடப் பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸை சேர்ந்த திருமகன் ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் இன்று நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இடைத்தேர்தலுக் கான தேர்தல் பிரசாரம் 25-ம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
52 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 238 வாக்குச் சாவடிகளில் ஆயிரத்து 206 அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.‘ பதற்றமான வாக்குச் சாவடிகள் என கண்டறியப்பட்ட 32 வாக்குச் சாவடிகளில் துணை ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முற்பகல் 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குகள். பதிவாகி உள்ளது. இதில், 32, 562 ஆண்களும், 30. 907 பெண்களும் வாக்களித்தனர். இதையடுத்து மொத்தம் 63,469 பேர் வாக்குகளை பதிவு செய்துள்ளனர் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.