சென்னை:  ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நிலையில் அங்கு  வெற்றி பெறப்போவது யார் என்பது குறித்து லயோலோ கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான குழுவினர் நடத்திய  கருத்து கணிப்புகள் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் 77 பேர் களத்தில் உள்ளனர். ஆனால், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  அங்கு நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் இறுதிக்கட்ட  தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இன்று மாலை 5மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகறிது.

இந்த  நிலையில்,  லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் ச. ராஜநாயகம் வழிகாட்டுதலில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்  39.5 சதவிகித வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது. இதனால் அங்கு காங்கிரஸ் கட்சி வெற்றிபெறுவது உறுதியாகி உள்ளது.

அதிமுகவுக்கு 24.5 சதவிகித வாக்குகளுக்கும், நாம் தமிழர் கட்சிக்கு 9.5 சதவிகித வாக்குகளுக்கும், தேமுதிகவுக்கு 2 சதவிகித வாக்குகளுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம்,  முதல் வாக்காளர் உள்ளிட்ட 21 வயதுக்குப்பட்ட இளம் வாக்காளர்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சிக்கு அமோக வரவேற்பு உள்ளதும் தெரிய வந்துள்ளது. அதன்படி நாம் தமிழர் கட்சி 29.5 சதவிகிதமும் காங்கிரஸ் 28.5 சதவிகிதமும் அதிமுகவுக்கு 17 சதவிகிதமும் தேமுதிகவுக்கு 3 சதவிகிதமும் பெற்றுள்ளனர்.

மேலும் கல்வி, தொழில், சாதி, மதம், பாலினம் ஆகிய பிற அனைத்துக் காரணிகளைப் பொருத்தவரை காங்கிரஸ் வேட்பாளர் முதலிடத்திலும் அதிமுக, நாம் தமிழர் வேட்பாளர்கள் இரண்டாம் மூன்றாம் இடங்களில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.