ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சியினரால்  அடைத்து வைக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்த செய்தியாளர் மீது தாக்குதல், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், அரசியல் கட்சியினரின் செயலுக்கு பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.  இந்திய ஊடகவியலாளர் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது.


ஈரோடு கிழக்கு தொகுதியில் விதிமீறல்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளர், ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்டுள்ளனர்.  அரசியல் கட்சியினர் நடத்திய தாக்குதலில்,  தனியார் ஊடகத்தின் ஒளிப்பதிவாளர் கருப்பையா  கழுத்தில் காயத்துடனும், செய்தியாளர்  ராஜேஷ் கைகளில் ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு இடைத்தேர்தலில், ஆளும்கட்சி வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இதனால், அங்குள்ள வாக்காளர்களை அழைத்துச்சென்று, அவர்களுக்கு பணம் கொடுத்து அடைத்து வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள், குக்கர் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஒருஇடத்தில் பொதுமக்களை மொத்தமாக வெளியாட்கள் உள்ளே புகமுடியாதபடி அடைத்து வைத்து பாதுகாத்து வருவதை கண்டறிந்த தனியார் ஊடக   செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் அவர்களை சந்தித்து பேட்டி எடுத்தார். அதைக்கண்ட கட்சி நிர்வாகிகள் அவர்கள்மீது தாக்குதல் நடத்தினர்.

அரசயில் கட்சியின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு  எதிர்க்கட்சிகளும், பத்திரியாளர்கள் மன்றங்களும் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றன.

இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் மன்ற இணைசெயலாளர் பாரதிதமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று 21-02-2023 செவ்வாய்க்கிழமை காலை “ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் பகுதியில் KNK சாலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அந்த பகுதி வாக்காளர்களை மக்களை ஆடு மாடுகளை பட்டியில் அடைப்பது போல வாக்காளர்களை அடைத்து வைத்துள்ளனர்.” என்ற தகவல் கிடைக்கப்பெற்ற நியூஸ் தமிழ் செய்தியாளர் ராஜேஷ் குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் கருப்பையா அங்கு செய்தி சேகரிக்கும் பணியில் இருக்கும் போதே அந்த செய்தி நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போது அடையாளம் காணக்கூடிய அரசியல் கட்சியினர் செய்தியாளர் ராஜேஷ்குமாரை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்ததுடன் ஒளிப்பதிவாளர் கருப்பையா மீது ஆபாசமாக பேசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்றைய மோசமான தாக்குதலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டித்த நிலையில் இன்றும் (22-02-2023) புதன்கிழமை காலை 10 மணியளவில் வீரப்பன் சத்திரம் அசோகபுரம் என்ற பகுதியில் வாக்குக்கு பணம் கொடுப்பதாக தகவல் வந்த நிலையில் செய்தி சேகரித்துள்ளனர் நியூஸ் தமிழ் தலைமைச் செய்தியாளர் ராஜேஷ் குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் கருப்பையா.

அங்கு அரசியல் கட்சியினர் செய்தியாளர் ராஜேஷ் ஒளிப்பதிவாளர் கருப்பையா மீது கடும் தாக்குதல் நடத்தியதுடன் ஒளிப்பதிவு கருவியை உடைத்துள்ளனர். கழுத்தில் காயத்துடன் செய்தியாளர் ராஜேஷ் கைகளில் ரத்த காயங்களுடன் ஒளிப்பதிவாளர் கருப்பையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் களத்தில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதுடன் இனியாவது இந்த பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுத்திட தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

கட்சி பேதமின்றி சமுக விரோத கும்பல்கள் பத்திரிகையாளர்களை ஊடகவியலாளர்களை தாக்கும் அவலம் தொடர்வது ஊடக சுதந்திரத்திற்கு பேராபத்து என தெரிவித்துள்ளார்.

,இதுதொடர்பாக இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கமும்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  அதில், கடந்த 21ம் தேதி காலை கருங்கல் பாளையம் பகுதியில் கே.என்.கே.சாலையில் நிருபர் ராஜேஷ் குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் கருப்பையா செய்தி சேகரிக்கும் பணியில் இருக்கும் போது அடையாளம் காணக்கூடிய அரசியல் கட்சியினர் நிருபர் ராஜேஷ்குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் கருப்பையா மீது ஆபாச மாக பேசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று புதன்கிழமை காலை வீரப்பன் சத்திரம் அசோகபுரம் பகுதியில் வாக்குக்கு பணம் கொடுப்பதாக தகவல் வந்த நிலையில் செய்தி சேகரித்துள்ளனர். நியூஸ் தமிழ் தலைமை நிருபர் ராஜேஷ் குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் கருப்பையாவை அங்கு அரசியல் கட்சியினர் கடும் தாக்குதல் நடத்தியதுடன் ஒளிப்பதிவு கருவியை உடைத்துள்ளனர். படுகாயம் அடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், மேலும் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பை காவல் துறையினர் உறுதி செய்ய வேண்டும். மேலும் இந்த பிரச்சினையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை தலையீட்டு தீர்வு காண IMJU வலியுறுத்துகிறது.

இவ்வாறு கூறியுள்ளது.