பீஜிங் : எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவிற்கு சீனா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் உக்ரைக்கு சென்ற நிலையில், சீனா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி மாஸ்கோவிற்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக அமைதிப் பேச்சுக் களுக்கு அழைப்பு விடுத்தார்.
உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா போரை தொடங்கியதும் உலக நாடுகள் பலவும் இது ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கை என கூறி ரஷியாவை கண்டித்தன. ஆனால் ரஷியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனா ரஷியாவை கண்டிக்கவில்லை. மேலும் ரஷியாவுடனான உறவில் எந்த மாற்றமும் இல்லை தொடரும் என சீனா தெரிவித்தது. இதற்கு அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் பைடன் உக்ரைனில் திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், உக்ரைனுக்கு மேலும் உதவி செய்வதாக அறித்துள்ளதுடன், மேற்கத்திய நாடுகள் துணை நிற்கும் என பேசியிருந்தார்.
இந்த நிலையில், சீனா மீது பழிபோடுவது மற்றும் வெறுப்பை திணிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இன்று உக்ரைன், நாளை தைவான் என்ற அறிக்கைகளுடன் சீனா மீது வீண்பழி சமத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சீனா வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் சீனா தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி கின் காங் உக்ரைன் போர் குறித்து பேசுகையில், “நாங்கள் தொடர்ந்து நல்லிணக்கத்தை ஊக்குவிப்போம் மற்றும் பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவோம். உக்ரைன் நெருக்கடிக்கு அரசியல் தீர்வுக்கான சீனாவின் ஞானத்தை பகிர்ந்துகொள்வோம்.
சர்வதேச சமூகத்துடன் இணைந்து உரையாடல் மற்றும் ஆலோசனைகளை மேம்படுத்துவது, அனைத்து தரப்பு கவலைகளையும் நிவர்த்தி செய்வது மற்றும் பொதுவான பாதுகாப்பை அடைவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றவர், “போரில் தொடர்புடைய சில நாடுகள் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதை நிறுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்ததுடன், சீனா மீது பழிபோடுவது மற்றும் வெறுப்பை திணிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ‘இன்று உக்ரைன், நாளை தைவான்’ என்ற அறிக்கைகளுடன் சீனாவுடன் வம்பு செய்வதையும் குறிப்பிட்ட நாடுகள் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு பேசியுள்ளார்.