விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் அன்புஜோதி ஆஷ்ரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜாபருல்லா என்பவர் காணாமல் போனதாக புகார் எழுந்தது. அந்தப் புகாரின்பேரில் கடந்த 10-ம் தேதி போலீசாரும், அரசு அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அந்த ஆசிரம் உரிமையின்றி நடத்தப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அந்த ஆசிரமத்தில், மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியதும், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதும் தெரியவந்தது. மேலும் பலர் காணாமல் போனதாகவும் புகார்கள் எழுந்தது.
இதையடுத்து, அங்கு ஆய்வு செய்த காவல்துறையினர், புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, ஆஷ்ரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் மற்றும் பணியாளர்கள் சதீஷ், கோபிநாத், பிஜீமேனன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த விவகாரத்தில் மனித கடத்தல், உருப்புகள் கடத்தல் நடைபெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறி, பாஜக சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தி உள்ளது. இதையடுத்து, இந்த வழக்கை டிஜிபி சைலேந்திர பாபு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதனையடுத்து, இந்த வழக்கை நான்கு பேர் கொண்ட குழுவினரிடம் எஸ்பி ஸ்ரீநாதா எஸ்பி அலுவலகத்தில் நேற்றைய தினம் ஒப்படைத்தனர். அத்துடன் அங்கு கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள், மருந்து மாத்திரைகள், மடிக்கணிணி, 10 செல்போன்களும் ஒப்படைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சிபிசிஐடி எஸ்பி அருண்பால கோபாலன் தலைமையில், ஏடிஎஸ்பி கோபதி அடங்கிய 25 பேர் கொண்ட குழுவினர் இன்று அன்புஜோதி ஆசிரமத்தில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கட்டப்பட்ட சங்கிலி, அடிக்கப் பயன்படுத்திய தடிகள் உள்ளிட்ட பொருட்களை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், ஆசிரமத்தில் இருந்த தடயங்களை தடவியல் துறை துணை இயக்குநர் சண்முகம் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர் தடயங்களை சேகரித்து தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும், இந்த ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு, , விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 16 பெண்களை கல்பாக்கம் அரசு காப்பகத்திற்கு இன்று மாற்றினர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.