சென்னை: ஈரோடு கிழக்கில் முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், “ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர். எனவே, மத்திய படைகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுக்களை பரிசீலிக்கவும், தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகளை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆனி ஜோசப் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், “தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பின் அதில் தலையிடும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே, வெறும் யூகங்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.
தேர்தலில் முறைகேடுகள் நடக்கும் என மனுதாரர் அச்சம் தெரிவிக்க எந்த காரணங்களும் இல்லை.
இந்த தொகுதியில் வசிக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. அது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு.
முறைகேடுகளைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்கள், தொகுதியில் வசிக்காதவர்களின் பட்டியல் தேர்தல் அலுவலரிடம் வழங்கப்பட்டு அது சரிபார்த்த பிறகே வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
இறந்தவர்கள், தொகுதியில் இல்லாதவர்கள் பட்டியல் ரகசியமானது. அதை வெளியிட்டால் ஆள்மாறாட்டம் செய்ய வாய்ப்பு உள்ளது.
பூத் சிலிப்கள் கட்சி ஏஜெண்ட்களால் விநியோகிக்க அனுமதிக்கப்படுவதில்லை. தேர்தல் அலுவலர்கள் மூலம் மட்டுமே விநியோகிக்கப்படும்.
பணப்பட்டுவாடாவைத் தடுக்க 12 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொகுதியில் உள்ள 238 வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்புக் கேமிரா, வெப் காஸ்டிங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 409 சிஆர்பிஎஃப் வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பதற்றம் நிறைந்த 34 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது
எந்த புகாருக்கும் இடம் தராத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தர விட்டனர்.