ஈரோடு: “தூய்மை பணி செய்வதற்காக ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தவர்கள்தான், அருந்ததியர்கள்” என ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதறகு தமிழ்புலிகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அங்கு நான்குமுனை போட்டி நிலவி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி பொதுக்கூட்டத்தில் மக்கள் மத்தியில் பேசிய சீமான், ‘விஜயநகர பேரரசு நிறுவிய பிறகு உங்கள் மன்னர்களுக்கு செய்ததை போல் எங்களுக்கு பட்டாடை செய்து கொடுங்கள் என்று கேட்டார்கள். வேறு ஆளை பாருங்கள் என்று அவர்கள் தெரிவித்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் குஜராத்தில் இருந்து சவுராஷ்டிராக்களை இந்த விஜயநகர மன்னர்கள் இறக்கினார்கள்.
கடைசியாக இந்த நிலத்தில் என் ஆதி தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். அதைப்போல எங்கள் ஆட்சியிலும் நீங்கள் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்று சொன்னபோது, போடா வேற ஆளை பாரு என்றார்கள். வேறு வழியில்லாமல் ஆந்திராவில் இருந்து ஆதிக்குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள் என்றார்.
ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை செங்குந்த முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். அருந்ததிய சமுதாயத்தினர் 6% என்ற அளவில் உள்ளார்கள். இதில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக வேட்பாளர்கள் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் செங்குந்த முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர்களை வேட்பாளராக அறிவிக்கவில்லை. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா மட்டுமே அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்.
திராவிட கட்சிகள் ஜாதி அடிப்படையில் சீட் கொடுப்பதாக குற்றம்சாட்டி வந்த நாம் தமிழர் கட்சியினரின் வேட்பாளரே பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர் என்ற விமர்சனம் இதற்கு முன் எழுந்தது. இந்த நிலையில் சீமானின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த முத்துக்குமார், ‘அருந்ததி மக்கள் வந்தேறிகள் என்பதை சீமான் நேரடியாக சொல்லி இருக்கிறார். விஜயநகர பேரரசிடம் முதலியார்கள் மறுத்ததற்கு ஏதாவது ஆதாரம் இருக்கா? எந்த புத்தகத்தில் படித்தேன் என்பதை சொல்லவே மாட்டார். ஏனென்றால் சீமான் பேசுவதற்கு ஆதாரமே இருக்காது.
வாய்க்கு வந்ததை உளறுவதே சீமானின் வேலை. ஓட்டுக்காக ஒரு சமூக மக்களை ஜாதி ரீதியாக பிளவுபடுத்தும் வேலையை செய்பவர்தான் சீமான். ஒடுக்கப்பட்ட பள்ளர் சமூகத்தினரை உயர்ந்தவர்கள் என்று சொல்லி, இந்துத்துவா, பாஜக டார்கெட்டிற்குள் அவர்களை கொண்டு வந்து சேர்க்கும் வேலையைதான் முதலியார்கள் சமூகத்திலும் அவர் செய்கிறார்கள். ஆர்எஸ்எஸ் அஜென்டாவை அவர் செய்துகொண்டிருக்கிறார் என விமர்சித்தார்.