சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வில் பணியாற்றும் ஆசிரியர்கள், ‘வாட்ஸ் ஆப்’ பயன்படுத்த, அரசு தேர்வுத்துறை தடை விதித்து உள்ளது.  சமூக வலைதளங்களான பேஸ்புக்,  இன்ஸ்டாகிராம்,  டிவிட்டர் போன்றவைகளையும்  தேர்வு மையங்களில் பயன்படுத்தக்கூடாது என உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது.

தமிழகத்தில் வரும் மார்ச் 13ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்க உள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வு வரும் மார்ச் 14 ஆம் தேதி தொடங்குகிறது அதேபோல் பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் ஏப்ரல் 6 ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளில் மாநிலம் முழுவதும் சுமார் 25 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். பொதுத்தேர்வுக்கான தயாரிப்புகளில் தற்போது மாணவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பொது தேர்வுக்கான விதிகள் குறித்து பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளது. அதில்,

தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, மொபைல் போன் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

‘தேர்வு மைய கட்டுப்பாட்டு அறையில், உங்கள் மொபைல் போனை வைத்து விட வேண்டும். தேர்வு அறைக்குள் எடுத்து செல்லக் கூடாது.

‘பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை, தேர்வுமையத்தில் பயன்படுத்தக் கூடாது.

‘குறிப்பாக, வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதோ, அதன் வழியாக தகவல்கள் பரிமாறுவதோ கூடாது’ என, அறிவுறுத் தல்கள் வழங்கப்பட்டுள்ளன.