சேலம்: கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் சேலம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ், தமிழக அரசால் கொண்டுவரப்படும் திட்டங்கள் அனைத்தும் எவ்வாறு செய்லபடுகின்றன என்பது குறித்து களத்தில் முதல்வர் ஸ்டாலினால்  நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. எற்கனவே தற்கட்டமாக வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் ஆய்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து 2-வது கட்டமாக, சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதனப்டி சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை முதல்வர் ஆய்வு செய்கிறார்.

இதற்காக இன்று தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து,  சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார். முதலமைச்சருடன் தலைமைச் செயலாளர் இறையன்புவும் இணைந்து ஆய்வு செய்தார்.  அங்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

இதனையடுத்து, சேலம் புறப்பட்ட முதலமைச்சர் திடீரென ஓமலூர்  மேட்டூர் பிரதான சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று முன் அறிவிப்பின்றி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள வருகைப் பதிவேட்டினை பார்வையிட்ட முதலமைச்சர், அதிகாரிகள் பணியாற்றும் விதம் குறித்து கேட்டறிந்தார். மேலும் பட்டா மாறுதல் உள்ளிட்ட நடைமுறைகள் மற்றும் கோப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர், அரசின் நலத்திட்டங்கள் ஓமலூர் தாலுகாவில் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளன, திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஓமலூர் வட்டாட்சியர் வல்லமுனியப்பனிடம் கேட்டறிந்தார்.

மேலும் வருவாய் கிராமங்கள் வாரியாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, தாலுகா அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக காத்திருந்த பொதுமக்களை சந்தித்துப் பேசிய முதலமைச்சர், எப்போது மனு வழங்கப்பட்டது, உடனடியாக தீர்வு காணப்பட்டதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். பொது மக்களின் கோரிக்கைகள் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து ஓமலூர் பாத்திமா பள்ளி அருகே உள்ள அரசு ஆதிதிராவிடர் நல விடுதி மாணவிகளை சந்தித்தார். அங்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். அவர்களிடம் நலம் விசாரித்த முதல்வர், மாணவ, மாணவிகளை சந்தித்தார். தொடர்ந்து சாலை நெடுகில் மாணவர்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து சேலம் புறப்பட்டு சென்றார்.

இதனைத் தொடர்ந்து சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில், ஈரடுக்கு பேருந்து நிலையம், விக்டோரியா கலையரங்கம் உள்ளிட்டவற்றை முதல்வர் ஆய்வு செய்தார்.

இன்று (பிப்.15) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் சட்டம், ஒழுங்கு ஆய்வு கூட்டம் நடக்கிறது. இதில் நான்கு மாவட்ட ஆட்சியர்கள், சேலம் சரக டிஐஜி., மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா மற்றும் நான்கு மாவட்ட எஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சட்டம், ஒழுங்கு குறித்து ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

நாளை (பிப்.16) சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தை முதல்வர் நடத்துகிறார். இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்கள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதில் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள், நிறைவுற்ற பணிகள், நலத்திட்ட உதவிகள், அரசின் சலுகை திட்டங்கள் குறித்து கலந்தாய்வில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபடுகிறார். மேலும், இனிவரும் நாட்களில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.