டெல்லி: புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை இந்தியா எப்போதும் நினைவுகூரும் என டிவிட் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையின்போது, காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா தாக்குதல் நடைபெற்ற இடத்தில் மலர்கொத்து வைத்து அஞ்சலி செலுத்திய வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் பேருந்தில் முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, தற்கொடை படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள், வெடிகுண்டுகள் நிரப்பிய காரை கொண்டு, வீரர்கள் பயணம் செய்த பேருந்துகள் மீது மோத செய்து பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த பயங்கர வெடிவிபத்தில், 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இது இந்திய மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இந்திய ராணுவத்தினர் கடும் கோபத்துடன் பயங்கரவாதிகளை வேட்டையாடினர். தொடர்ந்து, பயங்கரவாத அமைப்பினருக்கும், அதை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானும் சரியான பதிலடி தரும் வகையில் 2019ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி பாகிஸ்தானில் எல்லைக்குள் நுழைந்த இந்திய விமானப்படை விமானங்கள் தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்து பரபரப்பை ஏற்படுத்தின. இந்திய வான்படையினர் அதிரடி தாக்குல் உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதனிடையே புல்வாமா தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி உள்பட அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு ராகுல் காந்தி எம்.பி இன்று அஞ்சலி செலுத்தினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம். வீரர்களின் தியாகத்தை இந்தியா எப்போதும் நினைவுகூரும் என தெரிவித்துள்ளார். அத்துடன் தான் ஒற்றுமையான யாத்திரையான பாரத் ஜோடோ யாத்திரையின்போது, காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில் தாக்குதல் நடைபெற்ற பகுதியில் மலர் அஞ்சலி செலுத்திய வீடியோவையும் பதிட்டுள்ளார்.