திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக வங்கி மேலாளர்களுடன் கலந்துரையாடிய டிஜிபி சைலேந்திரபாபு, அவர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வாங்கி உள்ளார்.
ஏடிஎம் மையங்களில் முகத்தை அடையாளம் காட்டக் கூடிய மென்பொருள் கொண்ட கேமராக்களை பொருத்தவும், ஏடிஎம் இயந்திரத்துடன், அருகே உள்ள காவல்நிலையத்திலும் அலாரம் ஒலிக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள நான்கு ஏ.டி.எம்.,களில் 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரே கும்பல் தான் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது என வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாவட்ட அளவில் ஐந்து டி.எஸ்.பிக்கள் தலைமையில் 9 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தொழில்நுட்ப ரீதியாக ஏ.டி.எம் குறித்து அறிந்தவர்கள் எனத் தெரிவித்தார். அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் இந்த கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாகவும், குற்றவாளிகள் சில தடயங்களை விட்டுச் சென்றுள்ளதால் இன்னும் 3 நாட்களில் கொள்ளையர்களை நெருங்கி விடுவோம் எனவும் ஐஜி கண்ணன் தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கு வெளியேவும் சிறப்பு படைகள் கொள்ளையர்களை தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர் பயன்படுத்திய கார் மற்றும் அதிலிருந்து இறங்கிச் செல்லும் நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியானது.
இந்த நிலையில், செய்தியளார்களை சந்தித்த தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, கொள்ளையர்களை அடையாளம் கண்டுவிட்டதாகவும், அவர்களை தனிப்படை போலீசார் விரைந்து பிடித்து விடுவதாகவும் தெரிவித்த நிலையில் ஹரியானா மாநிலம் நூக் மாவட்டம் மேவாட் என்ற பகுதியை சார்ந்த கொள்ளை கும்பல்தான் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
இந்த கொள்ளை கும்பல் கண்டெய்னர் லாரிகளில் திருடப்பட்ட கார்களுடன் ஆந்திர மாநிலத்தை கடந்து சென்றுள்ளது. இதனால் கொள்ளையர்கள் வாகனம் குறித்து ஆந்திரா தெலங்கானா எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
பின்னர், ஏடிஎம் மையங்களில் தொடர் கொள்ளை நடைபெற்றது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் வங்கி மேலாளர்கள் மற்றும் வங்கி பொறுப்பு அதிகாரிகளுக்கு உடனான கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் 51 வங்கிகளின் பொது மேலாளர்கள் மற்றும் வங்கி பொறுப்பு பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது வங்கி மற்றும் ஏடிஎம்களில் உள்ள பணத்தை கண்காணிக்க மறைமுக கேமராக்கள் நிறுவப்பட வேண்டும் என்றும் முகத்தை அடையாளம் காணக்கூடிய மென்பொருள் கொண்ட கேமராக்கள் அனைத்து ஏடிஎம் மையங்களிலும் பொருத்தப்பட வேண்டும் என்றும் காவல்துறை இயக்குநர் தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கினார்.
அதேபோல் வங்கி ஏடிஎம்களில் இயந்திரம் உடைக்கப்படும் பொழுது வங்கியில் அலாரம் ஒழிக்க வேண்டும் என்றும், வங்கி ஏடிஎம் மையம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திலும் அலாரம் ஒலிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பொழுது தான் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, வங்கி பொது மேலாளர் மற்றும் பொறுப்பு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
ஒரே இரவில் திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் கொள்ளை: காவல்துறையினரின் கையாலாகாதனம்?