கொழும்பு: பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என இன்று திடீரென பழ.நெடுமாறன் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இலங்கை ராணுவம், அதை மறுத்துள்ளது.


இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை ராணுவம் மற்றும் விடுதலைப்புலிகளுக்க இடையேயான  இறுதிப் போரில் முல்லிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது, இலங்கை ராணுவ தாக்குதலில் பிரபாகரன் வீரமரணம் அடைந்ததாக கூறப்பட்டது. அது தொடர்பான புகைப்படங்களும் உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் அவரது இறப்பு தினம், அவரது ஆதரவாளர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிருடனும், மிக நலமுடனும் இருப்பதாக தெரிவித்திருந்தார். இலங்கையில் ராஜபக்சக்களின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்பதாலும், சர்வதேச சூழல் தற்போது தமிழர்களுக்கு சாதகமாக இருப்பதாலும் இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் அவர் கூறினார். பிரபாகரன் விரைவில் தமிழீழம் பற்றிய விரிவான திட்டத்தை அறிவிக்கவுள்ளதாக கூறிய பழ.நெடுமாறன், அதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும், பிரபாகரன் குடும்பத்துடன் தமக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்த பழ.நெடுமாறன், இந்த செய்தியை அவர்களுடைய அனுமதியுடன் தெரிவிப்பதாகவும், மேலும் பிரபாகரன் விரைவில் பொது இடத்தில் தோன்றுவார் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில்,.  பழ. நெடுமாறனின்  கூற்றுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் 2009-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி நடந்த இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டதாகவும், டிஎன்ஏ அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்கள் இருப்பதாகவும் இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பழ. நெடுமாறனின் இந்த அறிவிப்பை முற்றிலுமாக மறுத்துள்ள பிரிகேடியர் ரவி, எதன் அடிப்படையில் பழ.நெடுமாறன் அந்த தகவலை சொன்னார் என்று எங்களுக்கு தெரியவில்லை. போரின் போதே பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை நாங்கள் நிரூபித்து விட்டோம். விரைவில் இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக பதிலளிப்பார் என்றும் இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.