சென்னை: தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ள மகளிருக்கான பிரத்யேக கொள்கையை, உலக மகளிர் தினமான மார்ச் 8ந்தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். அதில், மகளிர் மேம்பாடு, பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம், மாநில மகளிருக்கான கொள்கை வரைவு வெளியிடப்பட்டது. தற்போது மாநில மகளிர் கொள்கையை வெளியிட முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமாக பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் தங்கள் குறிக்கோள்களை அடைவதற்கான சூழலை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், அரசியலமைப்பு சட்டத்தின்படி பெண்களுக்கான சம வாய்ப்பு, சம உரிமை, பொருளாதார மேம்பாடு, திறன் வளர்த்தல், பாதுகாப்பான வாழ்வுரிமை, கண்ணியம்காத்தல் ஆகியவற்றை உறுதி செய்யவும், சமுதாயத்தில் மேலான நிலையை அடையவும், அரசியலில் வாய்ப்பு பெறவும் அவர்களை தயார்படுத்துவதற்கும், உரிமை பெற்றுத் தரவும், அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், கண்காணிக்கவும் மாநில மகளிர் கொள்கை வழிவகுக்கும்.
ஏற்கனவே வெளியிடப்பட்ட வரைவு அறிக்கையில்,. “பெண்களுக்கான சம வாய்ப்பு, சம உரிமை, பொருளாதார மேம்பாடு, திறன் வளர்த்தல், பாதுகாப்பான வாழ்வுரிமை, கண்ணியம் காத்தல் ஆகியவற்றை உறுதி செய்யவும், சமுதாயத்தில் மேலான நிலையை அடையவும், அரசியலில் வாய்ப்பு பெற அவர்களைத் தயார்படுத்தவும், உரிமை பெற்றுத் தரவும் வழிவகை செய்யப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு மகளிருக்கான பிரத்யேக கொள்கையை, உலக மகளிர் தினமான மார்ச் 8ந்தேதி உலக மகளிர் தினத்தன்று வெளியிட உள்ளது. இதில், “வாழ்ந்து காட்டு பெண்ணே’ என்ற திட்டம் மூலம் மகளிர் வங்கி தொடங்கப்பட்டு பெண்களுக்கு தேவையான கடனுதவி வழங்குவது, மகளிர் புகார் அளித்த 24 மணி நேரத்தில் குற்றங்கள் தொடர்பான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது, பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் 50 சதவீத பெண்கள் தலைமைப் பொறுப்பில் பணியாற்ற நடவடிக்கை எடுப்பது என்பன உள்ளிட்ட அம்சங்களும் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பெண் கல்வி இடைநிற்றலைக் குறைப்பது, ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஆயிரம் பெண் ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவது போன்றவை மகளிர் கொள்கையின் முக்கிய இலக்காகும்.
ஏற்கனவே வெளியிடப்பட்ட வரைவு கொள்கையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, இப்போது, மாநில மகளிர் கொள்கை முழு அளவில் தயாராகி உள்ளது. இந்தக் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் 8-ஆம் தேதி வெளியிடவுள்ளார்.