திருச்சி: எழுதாத பேனாவுக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை என கூறிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவின் பலத்தை ஈரோடு இடைத்தேர்தல் மூலம் தெரிந்து கொள்ளலாம்  என்றார்.

திருச்சியிவ்ல நடைபெற்ற தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண விழா அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ஈரோடு கிழக்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் பொதுமக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். எனவே, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார். அவரை பார்க்கும் போது விஜயகாந்தை பார்ப்பது போல் மக்கள் எண்ணுகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார் என்றார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தவர்,  ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது ஈரோடு தேர்தல் முடிவில் தெரிய வரும் என்றவர்,  தேமுதிகவின் பலம் குறையவில்லை என்பதை இந்த ஈரோடு இடைத்தேர்தல் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளலாம். என்றார்.

ஈரோட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர்,  இடைத்தேர்தல் என்பது ஜனநாயகமா அல்லது பணநாயகமா அது எப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே என்றவர்,  அமைச்சர்கள் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது. அதைவிடுத்து அவர்கள் வேறு பணிகளில் ஈடுபடுகிறார்கள். இதை மக்கள் ஏற்கவில்லை என்றார்.

திமுக ஆட்சி குறித்த செய்தியளரின் கேள்விக்கு பதில் கூறியவர்,  மிகக்குறுகிய காலத்தில் ஆளுங்கட்சியின் மீது ஒரு அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று கூறியதுடன் திமுக ஆட்சியை பாராட்டும் வகையில் ஒன்றுமில்லை என்றார். மேலும்,  திருச்சியில் கூட மாநகராட்சிபோல் ஒரு தெருவும் இல்லை. எந்த முன்னேற்றமும் இல்லை.  இதே நிலைதான் தமிழ்நாடு முழுவதும் உள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள திமுக மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளது என்றார்.

கடலுக்குள் பேனா சின்னம் வைப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும்போருது,  எழுதாத பேனாவுக்கு நினைவு சின்னம் வைப்பது என்பது தேவையில்லாதது – அதுவும் கடலில் வைப்பது என்பது தேவையில்லாதது என்றவர், ஏற்கனவே கேப்டன் மெரினா பீச்சிலே விழா எடுத்து கலைஞருக்கு தங்கப்பேனாவை பரிசளித்திருக்கிறார். மீண்டும் எழுதாத பேனாவுக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து செலவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை என்பது தேமுதிகவின் நிலைப்பாடு.

பேனா வைக்க  ஒதுக்கப்படும் பணத்தை கல்வி, பெண்கள் முன்னேற்றம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சாலை வசதிகள் என்று நாட்டுக்கு செய்யக்கூடிய ஏராளமான நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். ஆளுங்கட்சியினர் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளுக்காக அந்தப்பணத்தை செலவழிக்க வேண்டும் என்றார்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி யாருடன் என்ற கேள்வி,  எங்கள் கட்சியின் கொள்கையோடு நிறைய பேர் ஒத்திருக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் அதிமுகவோடு கூட்டணி வைத்தோம். தற்போது, கருத்துவேறுபாடு காரணமாக பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் வரும் தேர்தலில் கேப்டன் ஒரு நல்ல முடிவை அறிவிப்பார் என்று தெரிவிக்கிறேன் என்றவர்,  ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் முடிவுகள் வரும்போது, தேமுதிகவின் பலம் என்ன என்பதை நாங்கள் உணர்த்துவோம். தமிழகம் முழுவதும் தேமுதிக பலமாக உள்ளது.

இவ்வாறு கூறினார்.